இராணியின் படிக்கிணறு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு உள்ளது இது இராணியின் படிக்கட்டு என்று அழைக்கபடுகிறது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் காளி ராமர் கிருஷ்ணர் நரசிம்மர் கல்கி மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி வாமனர் வராகி நாககன்னிகள் யோகினி 16 வகையான கலை நயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர் சாதுக்கள் திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன. லட்சுமி தேவியுடன் வராகமூர்த்தி கையில் பாஞ்சஜன்ய சங்குடன் இருக்கும் சிற்பமும் உள்ளது.

1050 இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும் மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும் மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304 இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெருமாள் கோவிலில் தாயாரை முதலில் ஏன் தரிசிக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?

ராமாயணத்தில் 14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும் என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால் ராமர் சீதை மற்றும் லட்சுமணன் தண்டக வனத்திற்கு வந்து அங்கிருந்த சரபங்க முனிவரை தரிசித்தார்கள். ராமரை தரிசித்த பிறகு சரபங்க ரிஷி சுதீக்ஷன ரிஷியை சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு தன் உடலை அக்னியில் விட்டு விட்டு பிரம்ம லோகம் சென்று விட்டார். சரபங்கர் சொன்னபடி சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள் மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமர் சீதையுடன் லட்சுமணனும் வந்து கொண்டிருந்தான். வரும் வழிகளில் பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் ராமரை பார்த்து இந்த வானத்தில் வசித்து கொண்டிருக்கும் முனிவர்கள் நாங்கள் ராட்சர்களால் அனாதைகள் போல குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம். இதோ பாருங்கள் குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராட்சர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. பம்பா நதிக்கரையில் மந்தாகினி ஓடும் நதிக்கரையில் சித்ரகூடத்தின் அருகில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராட்சர்கள். ராமா ராட்சர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராட்சர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ராமர் முனிவர்களிடம் பேச ஆரம்பித்தார். முனிவர்களான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே இந்த வனத்திற்கு வந்துள்ளேன். என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான் உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராட்சர்களை தடுப்பேன். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது. உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராட்சர்களை நான் ஒழிப்பேன். என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என்று உறுதியளித்து அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. திருப்தியே இல்லாதவன் பொய் பேச துணிவான். திருப்தியே இல்லாதவன் அடுத்தவர்களின் தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான். திருப்தியே இல்லாதவன் தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். பொய் சொல்வதை காட்டிலும் மற்ற இரண்டும் மிகவும் கொடியது. நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அசத்தியம் கிடையவே கிடையாது. அதே போல பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை. பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை. நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்தினிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர் சத்தியத்தை மீறாதவர் தகப்பனார் ஆணையை மீறாதவர். உங்களிடம் எப்பொழுதும் தர்மமும் சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது. புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன். உங்களிடம் பொய்யும் இல்லை பெண்ணாசையும் இல்லை. ஆனால் இப்போது உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும் மூன்றாவது குறை தெரிகிறதே. இந்த வனத்தில் வசிக்கும் முனிவர்களைப் பாதுகாப்பதற்காக ராட்சசர்களைக் கொல்வேன் என்று முனிவர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே. நீங்கள் இந்த வனத்தில் ராட்சசர்களைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த காரணத்தால் உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்படக் கூடாதே என்று கவலை கொள்கிறேன் என்றாள் சீதை.

திருமால் ராமராக அவதரித்தது போல் மகாலட்சுமியே சீதையாக அவதரித்து இருப்பதால் இறைவியின் இந்த குணம் வெளிப்பட்டது. எலும்பு குவியலாக முனிவர்களை கொன்று குவித்த ராட்சசர்களை கொல்ல கூடாது என்பதற்காக தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும் சீதையையை கண்டு சிரித்தார் ராமர். சீதையின் குணம் இது என்று அறிந்த ராமர் தர்மத்தை காப்பது என் கடமை. நானாகவே ராட்சசர்களை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. முனிவர்கள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். தர்மத்தின்படி அவர்களை காக்கும் பொறுப்பு சத்ரியனான எனக்கு இருப்பதால் அவ்வாறு வாக்கு கொடுத்தேன் வாக்கு கொடுத்து விட்டால் என்னால் மீறவே முடியாது என்று நடக்க ஆரம்பித்தார்.

ராமர் முனிவர்களை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும் சத்ரியர்களுக்கு உண்டான தர்மத்தின் படி ராட்சசர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று வாக்கு கொடுத்தார். சீதை தாயுள்ளத்துடன் ராட்சசர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள். இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல அசோகவனத்திலும் காணலாம். சீதையை பார்த்து உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன் என்று 10 மாதங்கள் ராட்சசிகள் சூழ்ந்து கொண்டு அவளை சித்ரவதை செய்தனர். போரில் ராவணன் கொல்லப்பட்ட பின் அனுமான் சீதையை அழைக்க வந்த போது உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராட்சசிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா? என்று கேட்க அப்போது சீதை தன்னை சித்ரவதை செய்த ராட்சசிகளுக்கு பரிந்து பேசி அனுமானை சமாதானம் செய்து ராட்சசிகளுக்கு தீங்கு ஏதும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பரமாத்மா தர்மத்தை காப்பவர். தர்மம் செய்பவர்களை காப்பதற்காகவும் அதர்மம் செய்பவர்களையும் தர்மத்திற்கு எதிரானவர்களையும் தண்டித்து விடுவார். தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் அவனை திருத்துவதற்காக பரிந்து பேசும் குணம் உடையவள். பெருமாள் கோவிலில் நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால் தகப்பனார் போல இருக்கும் பெருமாள் இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன? என்று கவனித்து விடுவார். நம்மை பார்த்தவுடனேயே இப்படி அதர்மம் செய்கிறானே இவனை திருத்த தண்டனை கொடுத்தால் என்ன? என்று நினைப்பார். நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு பிறகு பெருமாளை பார்க்க சென்றால் நாம் செல்வதற்கு முன்பே நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள் என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார். தாயாரை பார்த்து விட்டு வருபவர்கள் தவறு தெரிந்தாலும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அணுகிரகம் செய்து விடுவார் பெருமாள்.

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை

பெருமாள் சனிக்கிழமை உகந்த நாளாக வைத்து வழிபடப்படுகிறார். இதற்கான காரணம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும் யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணன் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து சகோதரியே உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை அமங்களமானவன் என்று கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அங்கே வந்த நாரதர் சனீஸ்வரா யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய் என்று கூறினார்.

கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர் ஹோலிகா என்று இரண்யனுக்கொரு சகோதரி இருந்தாள். அவள் தீயால் தன் உடம்பு சுடப்படாமல் இருக்கும் விசேஷ வரத்தை வைத்திருக்கிறாள். பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரண்யன் ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா தானும் தீக்குள் இறங்கி அவனை வெளியே வர முடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார். ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரண்யனைக் கொன்ற நரசிம்மராக வந்த திருமாலை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள்.

கண்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள் ஹோலிகா. சனீஸ்வரா நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கி விட்டால் கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம் என்றார். அடுத்த நாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்து விட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிப்பார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீஸ்வரனைக் கண்ணனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன் சனீஸ்வரா நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28 வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன் என்று வரமளித்தான்.

வழுவூர் கோவிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி

தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.

ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.

பூரண சரணாகதி

ஒருவர் கடவுளுடைய மகிமை பிரார்த்தனையின் மகத்துவம் என்று தினமும் போதனை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் நதியை படகில் கடக்கும் போது படகு நீரில் மூழ்கி அதில் இருந்த பலரும் இறந்து விட்டார்கள். இவர் மட்டும் நதியின் நடுவே இருந்த ஒரு மரத்தின் கிளையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்காமல் கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று பிரார்த்தனை செய்தார். அப்போது கடவுள் எதிரில் வந்து உன் பிரார்த்தனையை கேட்டு நான் வந்தேன் கவலைப்படாதே வா என் கையை பிடித்துக் கொள் என்றார். இந்த மனிதர் கிளையைப் பிடித்துக் கொண்டு நான் உன்னை பிரார்த்தனை செய்து கூப்பிட்டதற்காக நீ வந்திருக்கிறாய் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த மரக்கிளையை நான் விட்டால் தண்ணிரீல் அடித்துக் கொண்டு சென்று விடுவேன். ஆகையால் நான் இந்த கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் காப்பாற்றி விடு. என் கையை மட்டும் கிளையில் இருந்து எடுக்கச் சொல்லாதே என்று சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர ஓடிப் போய் கடவுளை கட்டிக்கொண்டு அப்பா காப்பாற்றி விட்டாயே என்று சொல்லத் துணியவில்லை.

இதுதான் இந்த உலகத்தில் இன்று இருக்கும் பல பக்தர்களின் கதை. தன்னை இறைவனிடம் ஒப்புக்கு கொடுக்காமல் இருக்கிறார்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து முழுமையாக உன்னை கடவுளிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

பரா முதல் குழந்தை வரை

பரா முதல் குழந்தை வரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரா எனும் அசையா சக்தியிலிருந்து
பரை எனும் அசையும் சக்தி தோன்றி
அந்த பராபரையிலிருந்து சிவம் தோன்றி
சிவத்தில் சக்தி தோன்றி
சக்தியில் நாதம் (ஒலி) தோன்றி
நாதத்தில் விந்து (ஒளி) தோன்றி
விந்துவில் சதாசிவம் தோன்றி
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி
ருத்திரனில் விஷ்ணு தோன்றி
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி
ஆகாயத்தில் வாயு தோன்றி
வாயுவில் அக்னி தோன்றி
அக்னியில் நீர் தோன்றி
நீரில் நிலம் தோன்றி
நிலத்தில் அன்னம் தோன்றி
அன்னத்தில் உயிர்சக்தி தோன்றி
உயிர்சக்தியில் உதிரம் தோன்றி
உதிரத்தில் மாமிசம் தோன்றி
மாமிசத்தில் மேதை (அறிவு) தோன்றி
மேதையில் அஸ்தி (எலும்பு) தோன்றி
அஸ்தியில் மச்சை (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை) தோன்றி
மச்சையில் சுக்கிலம் தோன்றி
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து ஜலமயமாகிப் பின்
ஏழாம் தினத்தில் குமிழியாகி
முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி
அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு சிரசு உண்டாகி
தொண்ணூறாம் நாள் பிண்டம் திரண்டு மூட்டு கை கால்கள் உண்டாகி
நூற்று இருபதாம் நாள் தண்டமாய் நரம்பு நாடி உண்டாகி
நூற்றி ஐம்பதாம் நாள் ஒன்பது துவாரங்களும் உண்டாகி
இருநூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கருவை சூழ்ந்து புரளும்
இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி அறிவுக் கண் திறந்து
முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல் நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் குழந்தை.

ருத்ராட்சம்

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பிரம்மனிடம் வரம் பெற்று சர்வ வல்லமை படைத்தவனாக இருந்தான். அந்த கர்வத்தினால் அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் எம்மிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டோம். அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரே சக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம் தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது மூன்று கண்களையும் அவர் பல ஆண்டுகள் மூடாமல் இருந்ததால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.

ருத்ராட்சத்தை பக்தியுடன் அணிபவர்களை சிவன் எப்பொழுதும் தன் கண் போலக் காப்பாற்றுவார். ருத்ராட்சம் அணிந்தால் மனமும் உடலும் தூய்மை அடைந்து நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும். ஆமாம் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும் உணவு உண்ணும் போதும் தூங்கும் போதும் இல்லறத்தில் ஈடுபடும் போதும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர் சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல் புகை பிடித்தல் புலால் உண்ணுதல் போன்றவற்றை விட்டுவிட வேண்டும். ருத்ராட்சம் நீரில் மூழ்கினால் அது நல்ல ருத்ராட்சமாகும் மிதந்தால் அது போலி.

ருத்ராட்சம் பெண்கள் அணியக்கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது அது உண்மையா? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று அருணாசல புராணம் பாடல் எண் 330 விவரிக்கிறது.

உணவு

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்ற ஒரு வரி இலக்கிய பாடல்களில் உள்ளது இதற்கான விளக்கம்

காக்கை – இதனை பிரித்து படித்தால் கால் + கை. உள்ளங்கையில் கால் அளவு என்று பொருள்.
கறி சமைத்து – காய்கறி சமைத்து
கருவாடு மென்று – இதனை பிரித்து படித்தால் கரு + வாடும் + என்று . கரு என்றால் உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று பொருள்.
உண்பர் சைவர் – சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உடலின் கருவாகிய உயிர் வாடும் முன்பாக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து சைவர்கள் உண்பார்கள்

கருத்து: சிவனை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சைவர்கள் சிவனை தரிசிக்கும் வரை உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பார்கள். இவ்வாறு உண்பதால் உடலில் நோய்கள் பெருகாது பற்றுகள் குறையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒல்லியான தேகத்துடன் இருப்பதினால் முக்திக்கு வழிகாட்டியான யோகப்பயிற்சிகள் தவங்கள் எளியாக செய்ய முடியும்.

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் என்பது அவரவர்களால் அறியப்படுகிற ஒரு பொருள். இன்று வரை யாராலும் அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன் காரணம் மனிதன் நூறு வருடங்கள் வாழ்கிறான் என்றால் ஆன்மாவின் தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில் வாழ்கிறது.

ஆத்ம ஞானத்ததைப் பற்றி கருத்துக்கள் சொல்வது குருடர்கள் யானையைத் தொட்டு தடவிப் பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான் இருக்கும். யானையின் காலைத் தொட்டு பார்த்தவன் தூண் மாதிரி இருப்பதாகச் சொல்வான். அதன் காதை தொட்டு பார்த்தவன் முறம் மாதிரி இருப்பதாகச் சொல்வான். காதை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். காலை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். ஆனால் காதும் காலும் மட்டும் யானையாகாது. அவர்கள் கண்டது ஆத்ம ஞானத்தின் ஒரு பகுதி மட்டுமே.

சிவம்

மனிதனின் நாசி துவாரம் வழியாக பிராயாணாணம் பயிற்சி செய்து மேல் நோக்கி உச்சம் சென்று பின் மண்டையை சுற்றி வந்தால் அதன் வடிவமே சிவலிங்கம். சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில் அருவமாக ஒரு ஒளி தெரியும் அது தான் சிவம். குண்டலினி சக்தி என்றும் சொல்லலாம்.