சிவன் சொத்து குல நாசம் இதன் அர்த்தம்

சிவன் சொத்து என்பது சுக்கிலம் ஆகும். சதா காலமும் சிவன் சொத்தான சுக்கிலத்தை பூமியை நோக்கி கீழே விழச் செய்யாமல் சேமித்து யோக பயிற்சியின் மூலம் குண்டலினியை மேலே எழச்செய்து சகஸ்ரதளத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரம்மச்சரியத்தால் கட்டி உச்சந்தலையை நோக்கி சுக்கிலத்தை உயர்த்தி உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும். அதன்பின்னர் சாதகனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும். இவ்வாறு சுக்கிலத்தை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும். இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.

மனம்

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு சீடன் குழப்பத்துடனே இருந்தான். சீடன் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த புத்தர் செல்லும் வழியில் ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார். சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். சீடன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து அந்த நீரை கொண்டுவா என்றார். அவன் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும் இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார் அந்த நீர் தெளிவதற்காக நீ ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தாய். கலங்கிய நீரை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது மனதை அப்படியே விட்டுவிட்டு அமைதியாக இரு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.

மன அமைதியைப் பெறக் கடினமாக பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருந்தாலே போதும் மனம் தானே குழப்பத்தில் இருந்து விடுபடும் – புத்தர்.

புத்தர்

புத்தர் இறக்கும் காலம் நெருங்கியதும் அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவதை பார்த்தால் நான் இதுவரை சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் என்றார்.

தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும் என்றார். அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் உங்களுக்குள் இருக்கும் ஒளியே உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது. அமைதியாக இருக்கும் அந்த சீடரைப் பாருங்கள். அவரால் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள் என்றார்.

அமைதியாக இருந்த சீடர் கூறினார் எனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ள புத்தர் உதவினார். நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும்? புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார். இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார். ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார். எனக்கு இது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். இதனை எப்படி அறிந்து கொண்டாய் என்று அவரிடம் அனைவரும் கேட்டார்கள்.

என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் புத்தர் இந்த உடலை விட்டு பிரபஞ்சத்தில் கலக்கப்போவது எனக்கு தெரிந்திருக்கிறது. அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன் . நீங்கள் அதனை உள்வாங்கவில்லை அதனால்தான் அழுகிறீர்கள் என்றார். புத்தர் மீண்டும் பேசினார். உனக்கு நீயே ஒளியாவாய் என்று புத்தர் கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து விட்டார்.

இறைவன்

ஒரு ராஜா தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார். திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எங்கிருந்தோ ஆறு இளையர்கள் வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் ராஜாவிடம் வருகிறார்கள். ராஜாவும் மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறுகிறார். முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான். இரண்டாவது இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான். மூன்றாவது இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான். நான்காவது இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான். ஐந்தாவது இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன ராஜா ஆறாவது இளைஞனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். இளைஞன் சற்று தயங்குகிறான் ராஜா மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான். அரசே எனக்கு பொன் பொருள் என்று எதுவும் வேண்டாம். வருடம் ஒரு முறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும் என்று சொன்னான். ராஜாவும் இவ்வளவு தானா என்று முதலில் கேட்டான். பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டான். ராஜா அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால் அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் ஐந்து இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

இந்தக் கதையில் கூறிய ராஜாதான் அந்த இறைவன். பொதுவாக எல்லோரும் இறைவனிடம் கதையில் கூறிய முதல் ஐந்து இளைஞர்களைப் போல் தனக்கு வேண்டிய செல்வம் திருமணம் குழந்தைகள் வேலை ஆரோக்கியம் என்று கேட்பார்கள். கடைசி இளைஞனைப் போல் இறைவனே நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

புல் சாப்பிட்ட கல்நந்தி

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை அறியாமலும் தெரியாமலும் ஒரு பசுக்கன்றின் மீது போட்டு விட்டார். அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால் அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அவரின் வீட்டுக்குள் நுழைந்தபோது வாசல்படி தலையில் இடித்து சிவ சிவா என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர் தேவசர்மா பற்றியும் அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் நீ சிவ என்று சொன்னதுமே பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். இதனால் வருத்தப்பட்ட தேவசர்மா ஹரதத்தரிடம் முறையிட்டான்.

ஹரதத்தர் கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும் அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர் தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து நீ சிவ சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார். கல் நந்தி எப்படி புல் சாப்பிடும் என்று கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில் இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால் கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று மனமுருக வேண்டினார். தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும் பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி கும்பகோணம் அருகே கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது.

நம்பிக்கை

ஞானி ஒருவரிடம் வந்த ஒருவன் இறைவனை நான் தினமும் வழிபடுகின்றேன். அவரை நம்புகின்றேன் ஆனால் எனக்கு ஏன் துன்பங்கள் மட்டும் வருகிறது என்று கேட்டான். அதற்கு ஞானி ஒரு கதை சொன்னார்.

ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார். தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டு மிகவும் பதட்டமாக இருந்தார்கள். அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும் ஒவ்வொருவரும் கைதட்டி விசில் அடித்து பாராட்டினார்கள். அவர் கூட்டத்தினரிடம் கேட்டார் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்களா என்று கேட்டார்

அனைவரும் ஒரே குரலில் ஆம் ஆம் உங்களால் முடியும் என்று கத்தினார்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்களா என்று கேட்டார். அவர்கள் ஆம் ஆம் நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்டவும் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானால் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என் தோளில் அமர வையுங்கள் என்றார். நான் உங்கள் குழந்தையை மறுபுறம் மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் என்றார். அங்கு நின்ற அனைவரும் திகைத்தார்கள். அனைவரும் அமைதியாகி ஒவ்வொருவராக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள். அனைவரும் கயிற்றின் மீது நடப்பவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை.

இக்கதையை ஞானி சொன்னதும் தனக்கு புரிந்துவிட்டது. இறைவனிடம் சரண்டைய முயற்சிக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

கருத்து:

நம்பிக்கை வேறு. சரணாகதி வேறு. சரணாகதி என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் யோசிக்காமல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய உலகில் இறைவனிடம் நம்பிக்கை வைக்கின்றோம். ஆனால் சிறு துன்பம் வந்ததும் நமது நன்மைக்காகவே இறைவன் இத்துன்பத்தை கொடுத்திருக்கின்றார் என்று நம்ப மறுத்து சரணடைய மறுக்கிறோம்.

கடவுள்

கடவுள் தான் இருப்பதை ஏன் மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்று குருவிடம் சீடன் கேட்டான். குரு ஒரு கதை சொன்னார்.

கடவுளிடம் ஒரு மனிதன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்றான். அப்போது குயில் ஒன்று பாடியது. அதைக் காதில் வாங்காத அவன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்று உரத்த குரலில் கத்தினான். உடனே உரத்த இடியோசை எழுந்தது அதையும் பொருட்படுத்தாத அவன் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை உன் தரிசனத்தை கொடு என்று இறைவனிடம் கேட்டான். சுடர்விட்டுப் பிரகாசித்த படி வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது நட்சத்திரத்தை கவனிக்காத அவன் தரிசனம் கொடுக்க மாட்டேன் என்கிறாய். பரவாயில்லை. ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு என்றான். கடவுள் மெல்ல கீழே இறங்கி பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார் அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான். கடவுள் இல்லை. கடவுள் இருந்திருந்தால் என்னோடு பேசி இருப்பார். அவரின் குரலை கேட்டிருப்பேன். கடவுள் இருந்திருந்தால் தரிசனம் கொடுத்திருப்பார். நன்றாக பார்த்திருப்பேன். கடவுள் இருந்திருந்தால் அற்புதத்தை காட்டியிருப்பார். நன்றாக ரசித்திருப்பேன். எதுவுமே நடக்கவில்லை ஆகவே கடவுள் இல்லை என்றான்

கதையைக் கேட்ட சீடன் சொன்னான் புரிந்தது குருவே கடவுள் தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

சிவனுக்கு உகந்த வில்வம்

  1. வில்வம்
  2. நொச்சி வில்வம்
  3. முட்கிளுவை வில்வம்
  4. விளா வில்வம்
  5. மாவிலங்கை வில்வம்
  6. மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள் முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகும்.

இறைநம்பிக்கை

சீடன் ஒருவன் குருவிடம் இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா என்று சந்தேகம் கேட்டான். சமயம் வரும் போது சொல்கிறேன் என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன் ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார். குழம்பிய சீடன் குருவே தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய் இது உன் பேச்சை இந்த பசு கேட்கும் ஆனாலும் நீ ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய் என்றார். கயிறு இல்லை என்றால் பசு ஓடிவிடும் ஆகையால் கயிற்றால் கட்டி கொண்டு செல்கிறேன் என்றான். அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கேட்டார். அதற்கு சீடன் குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன் என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன் என்றான்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

கருத்து:

பிறந்த பசு கன்று ஒன்று தன்னைப் பெற்ற பசுவிடம் மிகுந்த பாசம் இருந்தாலும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்திற்கு ஓடும். அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வரும். அப்பசுவின் நிலையே இறைவன் நிலை. சிவ சிவ என்று தெய்வத்தின் நாமத்தின் பெயரை மனம் உருகிச் சொல்லுபவர்கள் பின்னே அச்சிவன் செல்வான்.

அமைதி

பெரிய அரச வம்சமத்தை சேர்ந்த புத்தர் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியானார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் சிரித்தார்கள். கேலி செய்து அவர் மீது கல் வீசினார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே என்று கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. மக்களின் நீண்ட நேர கேலிக்கு பிறகு இறுதியில் குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து சன்னியாசியே நாங்கள் இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியுடன் ஆனந்தமாக இருக்கின்றீர்கள். எவ்வாறு தங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.

அமைதியாக அவர்களை பார்த்த புத்தர் நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு சொந்தம் என்றனர் மக்கள். இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார் புத்தர். எங்களுக்குத்தான் என்றார்கள் மக்கள். சரி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பினார் புத்தர்.