புல் சாப்பிட்ட கல்நந்தி

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை அறியாமலும் தெரியாமலும் ஒரு பசுக்கன்றின் மீது போட்டு விட்டார். அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால் அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அவரின் வீட்டுக்குள் நுழைந்தபோது வாசல்படி தலையில் இடித்து சிவ சிவா என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர் தேவசர்மா பற்றியும் அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் நீ சிவ என்று சொன்னதுமே பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். இதனால் வருத்தப்பட்ட தேவசர்மா ஹரதத்தரிடம் முறையிட்டான்.

ஹரதத்தர் கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும் அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர் தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து நீ சிவ சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார். கல் நந்தி எப்படி புல் சாப்பிடும் என்று கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில் இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால் கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று மனமுருக வேண்டினார். தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும் பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி கும்பகோணம் அருகே கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது.

நம்பிக்கை

ஞானி ஒருவரிடம் வந்த ஒருவன் இறைவனை நான் தினமும் வழிபடுகின்றேன். அவரை நம்புகின்றேன் ஆனால் எனக்கு ஏன் துன்பங்கள் மட்டும் வருகிறது என்று கேட்டான். அதற்கு ஞானி ஒரு கதை சொன்னார்.

ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார். தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டு மிகவும் பதட்டமாக இருந்தார்கள். அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும் ஒவ்வொருவரும் கைதட்டி விசில் அடித்து பாராட்டினார்கள். அவர் கூட்டத்தினரிடம் கேட்டார் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்களா என்று கேட்டார்

அனைவரும் ஒரே குரலில் ஆம் ஆம் உங்களால் முடியும் என்று கத்தினார்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்களா என்று கேட்டார். அவர்கள் ஆம் ஆம் நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்டவும் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானால் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என் தோளில் அமர வையுங்கள் என்றார். நான் உங்கள் குழந்தையை மறுபுறம் மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் என்றார். அங்கு நின்ற அனைவரும் திகைத்தார்கள். அனைவரும் அமைதியாகி ஒவ்வொருவராக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள். அனைவரும் கயிற்றின் மீது நடப்பவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை.

இக்கதையை ஞானி சொன்னதும் தனக்கு புரிந்துவிட்டது. இறைவனிடம் சரண்டைய முயற்சிக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

கருத்து:

நம்பிக்கை வேறு. சரணாகதி வேறு. சரணாகதி என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் யோசிக்காமல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய உலகில் இறைவனிடம் நம்பிக்கை வைக்கின்றோம். ஆனால் சிறு துன்பம் வந்ததும் நமது நன்மைக்காகவே இறைவன் இத்துன்பத்தை கொடுத்திருக்கின்றார் என்று நம்ப மறுத்து சரணடைய மறுக்கிறோம்.

கடவுள்

கடவுள் தான் இருப்பதை ஏன் மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்று குருவிடம் சீடன் கேட்டான். குரு ஒரு கதை சொன்னார்.

கடவுளிடம் ஒரு மனிதன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்றான். அப்போது குயில் ஒன்று பாடியது. அதைக் காதில் வாங்காத அவன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்று உரத்த குரலில் கத்தினான். உடனே உரத்த இடியோசை எழுந்தது அதையும் பொருட்படுத்தாத அவன் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை உன் தரிசனத்தை கொடு என்று இறைவனிடம் கேட்டான். சுடர்விட்டுப் பிரகாசித்த படி வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது நட்சத்திரத்தை கவனிக்காத அவன் தரிசனம் கொடுக்க மாட்டேன் என்கிறாய். பரவாயில்லை. ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு என்றான். கடவுள் மெல்ல கீழே இறங்கி பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார் அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான். கடவுள் இல்லை. கடவுள் இருந்திருந்தால் என்னோடு பேசி இருப்பார். அவரின் குரலை கேட்டிருப்பேன். கடவுள் இருந்திருந்தால் தரிசனம் கொடுத்திருப்பார். நன்றாக பார்த்திருப்பேன். கடவுள் இருந்திருந்தால் அற்புதத்தை காட்டியிருப்பார். நன்றாக ரசித்திருப்பேன். எதுவுமே நடக்கவில்லை ஆகவே கடவுள் இல்லை என்றான்

கதையைக் கேட்ட சீடன் சொன்னான் புரிந்தது குருவே கடவுள் தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

சிவனுக்கு உகந்த வில்வம்

  1. வில்வம்
  2. நொச்சி வில்வம்
  3. முட்கிளுவை வில்வம்
  4. விளா வில்வம்
  5. மாவிலங்கை வில்வம்
  6. மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள் முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகும்.

இறைநம்பிக்கை

சீடன் ஒருவன் குருவிடம் இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா என்று சந்தேகம் கேட்டான். சமயம் வரும் போது சொல்கிறேன் என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன் ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார். குழம்பிய சீடன் குருவே தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய் இது உன் பேச்சை இந்த பசு கேட்கும் ஆனாலும் நீ ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய் என்றார். கயிறு இல்லை என்றால் பசு ஓடிவிடும் ஆகையால் கயிற்றால் கட்டி கொண்டு செல்கிறேன் என்றான். அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கேட்டார். அதற்கு சீடன் குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன் என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன் என்றான்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

கருத்து:

பிறந்த பசு கன்று ஒன்று தன்னைப் பெற்ற பசுவிடம் மிகுந்த பாசம் இருந்தாலும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்திற்கு ஓடும். அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வரும். அப்பசுவின் நிலையே இறைவன் நிலை. சிவ சிவ என்று தெய்வத்தின் நாமத்தின் பெயரை மனம் உருகிச் சொல்லுபவர்கள் பின்னே அச்சிவன் செல்வான்.

அமைதி

பெரிய அரச வம்சமத்தை சேர்ந்த புத்தர் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியானார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் சிரித்தார்கள். கேலி செய்து அவர் மீது கல் வீசினார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே என்று கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. மக்களின் நீண்ட நேர கேலிக்கு பிறகு இறுதியில் குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து சன்னியாசியே நாங்கள் இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியுடன் ஆனந்தமாக இருக்கின்றீர்கள். எவ்வாறு தங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.

அமைதியாக அவர்களை பார்த்த புத்தர் நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு சொந்தம் என்றனர் மக்கள். இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார் புத்தர். எங்களுக்குத்தான் என்றார்கள் மக்கள். சரி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பினார் புத்தர்.

ஆயுள்

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் சீடர்கள் அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார். எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எழுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். அறுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். ஐம்பது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள். சில வினாடிகள் அமைதியாக இருந்த புத்தர் அது ஒரு மூச்சு என்றார்.

வெறும் மூச்சுவிடும் நேரம்தானா என்று கேட்டார் ஒரு சீடர். ஆமாம் வாழ்வு என்பது மூச்சுவிடும் ஒரு நேரம் தான். அந்த நேரம் மட்டுமே நமக்கு சொந்தம் அடுத்த மூச்சுவிடும் நேரத்திற்கு நாம் இருப்போமா இருக்க மாட்டோமா என்று யாருக்கும் தெரியாது. அதனால் நமக்கு சொந்தமான இந்த ஒவ்வொரு வினாடி நேரத்தையும் அனுபவித்து நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும். ஒவ்வொரு வினாடி பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும். சிலர் நேற்றைய நினைவில் வாழ்கிறார்கள். சிலர் இறந்தகால நினைவில் வாழ்கிறார்கள். சிலர் அறியப்படாத எதிர்காலத்தில் எதிர்காலக் கனவில் எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்ந்து நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள். இவர்கள் எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற கண்பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி அப்படியே கீழே விழுந்துவிட்டார்.

நண்பர் அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால் விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் கீழே இருந்து எழுந்தார். சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும் சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது என்று முடித்தார்.

கருத்து: பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல் நமது வேளையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு ஓடிவிடும்.

சொர்க்கம்

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன் ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று எண்ணி அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன் அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன் ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான் எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும் என்றார் குரு.

ஆசை

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர் ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்து கம்பளி மூட்டைப் பிடித்துக்கொண்டான். அப்போது ஆற்றின் வேகத்தில் கம்பளி மூட்டை அவனை அதனுடன் இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன்

கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான். அப்போது கம்பளி மூட்டையை பிடித்துக்கொண்டிருந்தவன் சொன்னான். இது கம்பளி மூட்டையல்ல கரடி நான் விட்டாலும் அது என்னை விட மறுக்கிறது என்றான். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை வைத்து அவற்றைப் பிடித்துக்கொண்டவுடன் அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். முடிவில் பிடித்த ஆசைகளை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை.