பிரம்மா தேவர்களை படைத்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து நீங்கள் யாகங்கள் செய்து என்னை ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் பிரம்மாவின் கட்டளைப்படி செய்யாமல் தங்களின் ஆசைகளுக்கு ஏற்ப அங்கிருந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு பிரம்மா யாகம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த ஞானம் அனைத்தும் மறந்து போனார்கள். இவர்களுடைய செயலைப் பார்த்த பிரம்மா நீங்கள் எந்த விதமான ஞானமும் இல்லாமல் போவீர்கள் என்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பல துன்பங்களை தேவர்கள் அனுபவித்தார்கள். பின் தேவர்கள் பிரம்மாவைச் சரணாகதி அடைந்து தாங்கள் செய்த தவறுக்கு பிராயத்சித்தம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் உங்களது சுகங்களினால் உருவான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள் என்றார். தேவர்களும் அவர்களுடைய பிள்ளைகளிடம் சென்று பிரம்மா சொன்னதுபோல் செய்யும்படி வேண்டிக்கொள்ள அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு பிராயச்சித்தம் செய்து இழந்த ஞானத்தை மீண்டும் கொடுத்து பிள்ளைகளே போங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பிள்ளைகள் என்று சொன்னதால் கோபம் கொண்டு இதனை பிரம்மாவிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட பிரம்மா அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் உங்களுடைய சுகத்தினால் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு தந்தை ஆனீர்கள். அதுபோல் அவர்கள் உங்களுக்கு பிராயச்சித்தம் செய்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்கு தந்தை ஆனார்கள். ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான். ஞானம் கொடுத்த அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். ஞானம் பெற்ற நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள் என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.
பித்ருக்கள் ஏழு விதமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு வகையினர்களும் உருவத்தை கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு பித்ரு லோகம் என்றும் பெயர். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்ற மூன்று வகையினர்கள் உருவம் இல்லாதவர்கள். தங்களுடைய தர்ம புன்ய பலன் மற்றும் ஞானத்தால் எங்குமிருக்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அணுவிலும் பிரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு விருப்பமான ரூபங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு சநாதன லோகம் என்று பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர். நம்முடைய இறந்து போன முன்னொர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்கள் இறந்து போனவர்களுக்கு நேரடியாகப் போவதில்லை. அவைகள் நேரடியாக பித்ரு கணங்களுக்கு அல்லது பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோக பலத்தால் மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுடர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள்.
பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய சிராத்தம் செய்து பிண்ட தானம் செய்யும் போது பூமியைப் பிளந்து கொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்கள் அணியப்பட்டிருந்தன. அந்தக் கை அவருடைய தகப்பனாருடையது. அவர் இறந்து போவதற்கு முன்னிருந்தது போலவே இருந்தது. பீஷ்மரும் பிதா கையில் பிண்ட தானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் போட்டு சிரார்த்தம் செய்தார். சிரார்த்தம் பித்ருக்களுக்கு செல்ல வேண்டும் என்ற தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வரம் கொடுத்து மறைந்து விட்டார். ஆகையால் நாம் செய்யும் சிரார்த்தம் பித்ரு தேவதைகளுக்குப் போய் பின் அவர்களால் இறந்து போன ஜீவாத்மாக்கள் எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கு அவர்களுக்கு சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரகஸ்யம் மார்க்கண்டேயருக்கு சனத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
