குடும்பத்தில் உள்ள கடமைகள் எல்லாவற்றையும் வாழ்க்கையில் முடித்துக்கொண்டு அதற்குப் பிறகுதான் கடவுளைத் தேட வேண்டும் என்று பல பேர் எண்ணுகிறார்கள். துறவு என்பது எதையும் சேர்த்துக் கொள்வதும் அல்ல. எதையும் விட்டு விடுவதும் அல்ல. விதிவசத்தால் நமக்கு வந்திருக்கக் கூடிய வாழ்க்கையை சகஜமாக அனுபவித்துக் கொண்டு எப்பொழுதும் இறைவனுடைய திருவடியில் எண்ணத்தை வைத்து செயல்படுவதுதான் ஆன்மீகம்.
மானசீகமான தெய்வத்தின் இறை நாமத்தை சொல்லிக்கொண்டே செய்யும் வேலைகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து ஒரு அடி எடுத்து வைத்தால் அடுத்த அடி தானாக வரும். லௌகீகத்தில் இருந்து ஆன்மீகம் வேறுபட்டது அல்ல. லௌகீகத்திற்குள்ளேயே தான் ஆன்மீக விருத்தி இருக்கிறது. எப்படி இருக்கின்றோமோ அப்படியே இருந்து கொண்டு வரக்கூடிய சுக துக்கங்களை இறைவன் செயலாக ஏற்றுக் கொண்டால் சீக்கிரம் கர்மா என்ற கடன் கழிந்து இறைவனை அடைந்துவிடலாம்.