கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?
சீடன் ஒருவன் குருவே இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? என்று சந்தேகம் கேட்டான். அப்போது ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான்.
குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார்.
குழம்பிய சீடன் சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்? எனக்கேட்டான்.
இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?
கயிறை விட்டால் அது ஓடிவிடும்.
அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?
குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்.
உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.