நீறில்லா நெற்றி பாழ் என்பது ஓளவை வாக்கு.
விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். பிறப்பு இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு என்றும் மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு என்றும் போற்றுகிறார் திருஞானசம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில்
சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம். சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும் என்கிறது தேவாரம்.
மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்கே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி. பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும் சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது. விபூதி சிறந்த கிருமி நாசினி அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் விபூதியை ஜபம் மந்திரித்தல் யந்திரங்கள் மருத்துவம் எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி அகத்தியர் பரிபூரணம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.