பசுவரட்டியிலும் கண்ணன்
இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம் ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை மற்றொருத்தி அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். சுவாமி நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள் என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார். பின் ஒரு பகுதியை வலதுபுறமாகவும் ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். உங்களில் வரட்டி தட்டும்போது விட்டல விட்டல என சொன்னது யார்? என்றார். திருட்டுக் கொடுத்த பெண் நான் தான் அவ்வாறு சொன்னேன் என்றாள். அப்படியானால் வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ அது காற்றில் பரவி அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது என்றார். திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன் கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.