இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்.