துர்வாச முனிவர் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதருக்கு பூஜைகள் செய்தார். அங்கு பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தர். மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற் காலையில் ஆலயத்திற்கு அருகே ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் செய்தார். அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு உணவு வைத்தார். அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றது. செல்லும் வழியில் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் சில பருக்கைகள் சிவவேடம் பூண்டவரின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அறியாத அவர் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.
சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது ஒரு வேடன் தன் அம்பால் அக்காகத்தை அடித்தான். காகம் திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது. அப்போது அந்த காகம் தேவவுருவம் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்தது. உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது. சிவகணங்களுக்கு ஒரு காகத்திற்கு முக்தியா என்று ஆச்சரியமடைந்தனர். சிவபெருமான் புன்முறுவல் பூத்து காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சில சோற்று பருக்கைகளை அன்னதானமாக ஒரு சிவனடியார் உண்டதனால் இக்காகம் இங்கு வந்தது என்று சிவகணங்களுக்கு கூறினார். காகத்திற்கு தீர்க்கத் துண்டன் என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.