நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவரைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால் அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் கயிலாயம் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் கயிலாயம் செல்கிறேன் என்றார். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார். சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார்.
உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன் நாரதரே என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் என்றார். நாரதர். இறைவன் என்ன சொன்னார் என்று ஆர்வத்துடன் கேட்டார். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று இறைவன் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டார். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் இறைவன் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே நீ இறைவன் மேல் வைத்த நம்பிக்கையின் பயனாக இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது.
என்றாவது ஒரு நாள் நிச்சயம் முக்தி அடைவோம் என்ற நம்பிக்கையுடன் தினமும் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இறைவனிடம் சரண்டைந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும்.