உலகில் முதலில் சிராத்தம் எப்போது உண்டானது?
பிரம்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மகரிஷி தோன்றினார். அந்த மகரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் ஒரு ஆயிரம் வருடம் தவம் செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் தனது உடலை விட்டார். இதனால் நிமி புத்ர சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தார். அந்த உடலுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை சரியாக செய்து எரித்தார். அடுத்த நாள் அமாவாசை தினம். விடியற்காலையில் எழுந்து இறந்த தனது புத்திரன் மேன்மை நிலையை அடைய என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில சிந்தனை உண்டானது. அதன்படி பிராமணர்களை அழைத்து தனது இல்லத்தில் உணவு சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் உணவு சாப்பிட அமர்ந்ததும் அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பையை தெற்கு நுனியாக வைத்தார். அவர்களுக்கு திருப்தியாக உணவு பரிமாறினார். அவர்கள் சாப்பிட்டு சென்றதும் அந்த இடத்தில் தன் புத்திரனின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி உணவு தானம் செய்த அதன் பலன் தனது புத்திரனுக்கு போகுமாறு நீரை தரையில் விட்டு பிரார்த்தனை செய்தார். இப்படி செய்ததால் தன் புத்திரனின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகி விட்டதாக அவருக்கு திருப்தி வந்தது. அடுத்த நாள் அவருக்கு யாரும் இதுவரை செய்யாத தவறான காரியத்தை ஏதும் செய்து விட்டோமோ என்று சிறிது பயம் உண்டானது. இதனை அறிந்தால் ரிஷிகள் ஏதும் சாபம் கொடுத்தது விடுவார்களோ என்று பயந்தார். உடனே தனது வம்சத்தைச் சேர்ந்த அத்ரி மகரிஷியை தியானம் செய்தார். அவரது வருத்தத்தை அறிந்த அத்ரிமகரிஷியும் உடனே அங்கு வந்தார்.
நீ செய்த இந்த கர்மமானது பித்ருக்களுக்குச் செய்த யாகம் ஆகும். ஆகவே நீ பயப்படாதே. நீ ஒரு தவஸ்வி. இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் செய்யவேண்டுமென்று உன் மனதில் தோன்றி பிறகு நீ இதனை செய்திருக்கிறாய். இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் இந்த யுக காலத்தில் செய்ய வேண்டுமென்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் செய்து அதன் பலனாக பல நன்மைகளை அவர்கள் அடைவார்கள் என்று பிரம்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. உனது தவ பலத்தினால் உனது மனதில் இது தோன்றும்படி பிரம்மா அருள் செய்தார். சிரத்தையுடன் செய்கிற கர்மமானதால் இதற்கு சிரார்த்தம் என்று பெயர் பெறும் என்று சொல்லி உபதேசித்துவிட்டு பிரம்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி மாத மாதம் அமாவாசை அன்று அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். அப்போது முதல் சிரார்த்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
நிமி ஏற்படுத்திய சிரார்த்த முறைகளை அனைவரும் செய்ய ஆரம்பித்ததால் பித்ருக்களுக்கு ஏராளமான உணவு கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட பித்ருக்கள் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சில துன்பங்களை அனுபவித்தார்கள். இதனை சந்திர பகவானிடம் முறையிட்டார்கள். அவர் பிரம்மாவிடம் போகும்படி சொல்ல பித்ருக்கள் பிரம்மாவிடம் போய்த் தங்களுடைய துன்பத்தை போக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். பிரம்மா அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்று ஆசி கூறினார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட அவரும் இனி உங்களிடம் வரும் உணவுகளை என்னுடன் கொடுங்கள் அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டு எரித்து அழித்து விடுகின்றேன் என்று சொன்னார். அன்று முதல் சிரார்த்தம் செய்யும் போது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.
சிரார்த்தம் என்பது ஆதிகாலத்திலேயே வேதங்களில் இருந்தவற்றை ரிஷிகள் தவம் செய்து அறிந்து கொண்டு அதனை பிரம்மாவினால் அறியப்பட்டு செய்யப்படுகிறது. சிரார்த்தம் செய்யும் போது செய்யப்படும் ஹோம அக்னியில் போடப்படும் திரவியங்கள் எல்லாம் பித்ரு கணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக இறந்து போன ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கிறது. இந்த ஜீவாத்மாக்ககள் இதனால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை அடைந்து மேன்மை நிலையை அடைகிறார்கள். அவர்களுக்கு மேன்மை நிலையை கொடுத்த பலனை சிரார்த்தம் செய்தவர்களும் பெற்று தங்களது துன்பத்தை போக்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
