ஆத்ம ஞானம் என்பது அவரவர்களால் அறியப்படுகிற ஒரு பொருள். இன்று வரை யாராலும் அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன் காரணம் மனிதன் நூறு வருடங்கள் வாழ்கிறான் என்றால் ஆன்மாவின் தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில் வாழ்கிறது.
ஆத்ம ஞானத்ததைப் பற்றி கருத்துக்கள் சொல்வது குருடர்கள் யானையைத் தொட்டு தடவிப் பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான் இருக்கும். யானையின் காலைத் தொட்டு பார்த்தவன் தூண் மாதிரி இருப்பதாகச் சொல்வான். அதன் காதை தொட்டு பார்த்தவன் முறம் மாதிரி இருப்பதாகச் சொல்வான். காதை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். காலை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். ஆனால் காதும் காலும் மட்டும் யானையாகாது. அவர்கள் கண்டது ஆத்ம ஞானத்தின் ஒரு பகுதி மட்டுமே.