இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு உள்ளது இது இராணியின் படிக்கட்டு என்று அழைக்கபடுகிறது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் காளி ராமர் கிருஷ்ணர் நரசிம்மர் கல்கி மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி வாமனர் வராகி நாககன்னிகள் யோகினி 16 வகையான கலை நயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர் சாதுக்கள் திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன. லட்சுமி தேவியுடன் வராகமூர்த்தி கையில் பாஞ்சஜன்ய சங்குடன் இருக்கும் சிற்பமும் உள்ளது.
1050 இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும் மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும் மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304 இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.