பெருமாள் சனிக்கிழமை உகந்த நாளாக வைத்து வழிபடப்படுகிறார். இதற்கான காரணம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும் யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணன் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து சகோதரியே உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை அமங்களமானவன் என்று கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அங்கே வந்த நாரதர் சனீஸ்வரா யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய் என்று கூறினார்.
கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர் ஹோலிகா என்று இரண்யனுக்கொரு சகோதரி இருந்தாள். அவள் தீயால் தன் உடம்பு சுடப்படாமல் இருக்கும் விசேஷ வரத்தை வைத்திருக்கிறாள். பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரண்யன் ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா தானும் தீக்குள் இறங்கி அவனை வெளியே வர முடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார். ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரண்யனைக் கொன்ற நரசிம்மராக வந்த திருமாலை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள்.
கண்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள் ஹோலிகா. சனீஸ்வரா நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கி விட்டால் கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம் என்றார். அடுத்த நாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்து விட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிப்பார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீஸ்வரனைக் கண்ணனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன் சனீஸ்வரா நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28 வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன் என்று வரமளித்தான்.