சௌந்தரிய லஹரி

ஆதிசங்கரர் பல ஊர்களுக்கு சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை ஆதிசங்கரருக்கு வழங்குகிறார். பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் சந்திரமெளலி என்று பெயர். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். சுவடியில் இருந்தது தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கைலாயத்தை விட்டு வெளிவருகிறார். வெளியில் இருந்த அதிகார நந்தி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன் கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்று எண்ணி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆதிசங்கரர் இதனை கவனிக்காமல் நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே ஆதிசங்கரர் கையில் மீந்துவிட மற்றதெல்லாம் கைலாய வாயிலில் விழுந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளில் உள்ள ஸ்லோகங்கள் எண்ணிக்கை முதல் 41. இதனை உணர்ந்த தேவி ஆதிசங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாக இயற்ற ஆதிசங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி என்றும் கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் பெயர் பெற்றது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரி என்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரங்களும் குண்டலினி பற்றியும் ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 41 ஸ்துதிகள் யோக முறையில் சாதகம் செய்து அன்னையின் பாதத்தை சரணடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது ஆனந்தம் எனவே ஆனந்த பிரவாஹம் என்று பெயர் பெற்றது. இந்த 41 ஸ்லோகங்கள் யோக முறையில் சாதகம் செய்பவர்களுக்காகவும் பின் வந்த 59 ஸ்லோகங்கள் பக்தி மார்கத்தில் உள்ளவர்களுக்கு பயன் தரும் வகையிலும் உள்ளது.

செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?.

செளந்தர்யம் என்றால் அழகு. லஹரி என்றால் பிரவாஹம் அல்லது அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தி உமையவள் உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதி ஆகையால் செளந்தர்யலஹரி என்ற பெயர் பெற்றது.

இறைவனைப் பற்றிய உரையாடல்

விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பலவிஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்கமுடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார். இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் இறைவனைப் பற்றிய ஆன்மிக விஷயங்களை பேசினார். விடைபெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார். இவ்வளவு நேரம் இறைவனைப் பற்றி நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.

நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனும் இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள் என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார். எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா. அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாளலோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார்.

விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை ஆதிசேஷனிடம் எடுத்துக்கூறினர். இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும். அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். தலையில் சுமக்க கடினமாக இருக்கும். எனவே ஆகாயத்தில் இதை நிலைநிறுத்தி வையுங்கள் என்றார் ஆதிசேஷன். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்று கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் இறைவனைப் பற்றிய நல்ல விஷயங்கள் பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்.

இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து தன் தலையில் மீண்டும் வைத்துக் கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலைமுடிந்து விட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும். உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர இறைவனைப் பற்றிய நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது என்றார் ஆதிஷேசன். இறைவனை உணர்ந்த பெரியவர்களுடன் இறைவனைப் பற்றிய உரையாடல் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விடசிறந்தது என்றார் ஆதிசேஷன்.

நிலம் யாருக்குச் சொந்தம்

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி இவ்வளவும் என்னுடையது சுவாமி என்றார். துறவி சொன்னார். இல்லையேப்பா இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே என்றார். அவன் எவன்? எப்போது சொன்னான்? என்று சீறினான் அந்த செல்வந்தன். ஐம்பது வருடத்திற்கு முன் என்றார் துறவி. செல்வந்தன் அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை என்றான். இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் ஒருவர் சொல்லிக்கொண்டு இருந்தாரே என்றார் துறவி. அவர் என் அப்பாவாக இருக்கும் என்றான் செல்வந்தன். நிலம் என்னுடையது என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார் துறவி. அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி. அந்த மண்டபங்களுக்குக் கீழே தான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம் என்றான் அந்த செல்வந்தன்.

துறவி சிரித்துக்கொண்டே நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என் சொத்து என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான் என்று கூறி முடித்தார் துறவி. செல்வந்தனோ தன் அறியாமை எண்ணி தலை குனிந்தான். உலகில் எதுவும் நிலையானது அல்ல. கவுரவம், பணம், சொத்து, பதவி எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டுச் சென்று விடும். நாம் செய்யும் தானமும் தவமும் நம்மை இறைவன் இருக்குமிடம் அலைத்துச் செல்லும். தானமும் தவமும் தான் செய்ததாயின் வானவர் நாடு வழி திறந்திடுமே என்கிறார் ஔவையார்.

பற்று

ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான். பல சொத்துக்களை வாங்கிக் குவித்தான். அவன் ஆசைப்பட்டதற்கு அதிகமாகவே அவனிடம் செல்வம் சேர்ந்து விட்டது. ஆனால் அவன் மனம் ஏனோ திருப்தியடையவே இல்லை. ஏதோ ஒரு வெறுமையை தனக்குள் அவன் உணர்ந்தான். அந்த வெறுமை உணர்வு அவன் மன அமைதியைக் கெடுப்பதாக உணர்ந்தான். இவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும் தன்னிடம் எல்லாம் இருந்தாலும் தன் மனதில் ஏதோ ஒன்று இல்லாதது போன்ற ஒரு வெறுமை உணர்வு ஏன் வந்தது? என்று தனக்குள் யோசித்தான். முடிவில் அவன் மனதில் அதற்கான காரணம் என்ன என்பது புலப்பட்டது. தன்னுடைய இந்த அமைதியற்ற வெறுமைக்குக் காரணம் செல்வத்தின் மீது தான் கொண்ட ஆசையினால் தான் என்ற முடிவுக்கு வந்தான். இனி அமைதியடைய என்ன செய்யலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தான் அடைந்த இந்த செல்வத்தையெல்லாம் ஒரு துறவிடம் கொடுத்து விட்டு மன நிம்மதியை அடைந்திடலாம் என்று தீர்மானித்தான்.

தனது எல்லா ஆஸ்திகளையும் விற்று செல்வமாக்கி ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் காடு மேடெல்லாம் அலைந்து ஒரு உண்மையானத் துறவியைக் கண்டு பிடித்தான். தான் கொண்டு வந்த மூட்டையை அவர் காலடியில் போட்டான். குருவே நான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய செல்வங்கள் அனைத்தும் இந்த மூட்டையில் இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டு என்னை சீடனாக ஏற்று மன நிம்மதியை அடையும்படிக்கு அருளுங்கள் என்று பணிந்து நின்றான்.

குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்த போது துறவியைக் காணவில்லை. அவரோ இவன் கொண்டு வந்த மூட்டைத் தூக்கிக் கொண்டு வெகு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். இவனைப் போய் உண்மையான நல்ல துறவி என்று எண்ணி ஏமாந்து விட்டோமே என்று துறவியைத் துரத்திக் கொண்டு ஓடினான். துறவியோ ஏற்கனவே தொலை தூரத்திற்குச் சென்று விட்டபடியினால் இவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் கண்களை விட்டே மறைந்து விட்டார். இவனுக்கோ களைப்பு மேலிட்டது. தாகம் வாட்டியெடுத்தது. சரி அந்தத் துறவியின் குடிலுக்குப் போய் தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்போம் என்று திரும்பி வந்தவன் திடுக்கிட்டான். அங்கு துறவி குடிலுக்கு முன் உள்ள மரத்தடியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடந்தார். மூட்டை கீழே கிடந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது துறவி மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவனைப் பார்த்துக் கேட்டார். நீ இந்த செல்வத்தால் நிம்மதியே இல்லை இது வேண்டாம் என்று தானே என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாய். பிறகு ஏன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தாய்? அப்படியானால் இந்தச் செல்வத்தின் மீதுள்ள பற்று இன்னும் உனக்கு நீங்கவில்லை என்று தானே பொருள். எனவே உமது செல்வத்தை எண்ணி சரி பார்த்து எடுத்துசெல். உடமைப் பொருள் எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பதே அமைதியடைவதற்கு ஒரே வழி என்றார். அவன் அவர் காலடியில் விழுந்து பற்று விட்டு பற்றில்லாமல் வாழ வழிகாட்டுங்கள் குருவே என்று அழுதான். அவர் அவனைத் தேற்றி ஞானம் பெற உபதேசித்தருளினார்.

இறைவனை அடையும் வழி

புதிதாக வந்த சீடன் குருவிடம் இறைவனை தேடுகிறேன் அறிந்து கொள்ள பல பயிற்சிகள் செய்கிறேன். என்னால் இறைவனை விரைவில் அறிந்து கொள்ள முடியுமா என்று குருவிடம் கேட்டான்.

குரு – சீடனே உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே. இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தான தர்ம செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில்
இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

தர்பைப்புல்

ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்ப தேசத்தில் இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றான். இனி வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்த போது அவனுடைய ராஜகுரு கூறினார் மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவலோகத்துக்குச் சென்று அங்குள்ள தேவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும். அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன் பூமியிலேயே அனைத்தையும் வென்றுவிட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒரு நாள் பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான்.

படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரம்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற பிரம்மா அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார். தம்போத்பவா நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன் முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா என்றார். தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க பிரம்மா பூமியில் வட பகுதியில் இருந்த கந்தமாதனா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.

தம்போத்பவாவும் உடனே கிளம்பி கந்தமாதனாவிற்குச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான். இவர்களையா நான் வெல்ல வேண்டும் என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் அவர்கள் தம்முடன் சண்டையிட்டு வெற்றிபெற வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடை வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் தம்போத்பவா நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம் என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை. அவர்களின் தவத்தை இடையூறு செய்த வண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான். எத்தனை நேரம் தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள் தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள்.

முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்து விட்டதை எண்ணி வியக்கின்றேன். அதற்கு அத்தனை மகிமையா? என்று கேட்டதும் அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீ இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா? தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். அவருடைய வலது கால் அபஸ்மரா என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருப்பார். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா? சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார். அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா?

அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது. நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால் தான் நல்லதோ கெட்டதோ ஹோமம் செய்யும் போது தர்பையினால் ஆனா பவித்ரம் {மோதிரத்தை} அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலை குறிக்கின்றது. நமது உடலை சுற்றி நம்மைக் காக்கும் அந்த தர்ப்பை. ஹோம குண்டங்களில் யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பையை வைப்பது அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது. நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான். அடுத்து தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி காலத்தை அமைதியாக கழித்தான்.

பசு நாகம் என்ற தெய்வ அம்சங்கள்

மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில் வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வாம்சமாக இருக்கின்றது. நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பு தெய்வாம்சமாக இருக்கின்றது. இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும் புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால் மனித வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை. மனித வாழ்க்கை முழுவதும் புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு சத்தான பாலைக் கொடுத்து நல்லவற்றை மட்டும் செய்யும் பசுவையும் தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். நஞ்சை உமிழும் பாம்பையும் கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார்.

நல்லவனுக்கும் சரி கெட்டவனுக்கும் சரி ஆத்திகனுக்கும் சரி நாத்தினுக்கும் சரி கடவுள் ஒன்றுதான்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தி

முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அதை பார்த்த அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அவர்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் உங்கள் அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச் சொல் என்று கூறி வெட்டிவிட்டான்.

ஐவரும் பதறி அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள் என்றார். உடனே அங்கு சென்ற ஐவரும் அந்த இடத்தில் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் இச்சிறு பாலகனா பக்தன் என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது. அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை பாலகனிடம் கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர்.

அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்கள் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச் செய்தான் அந்த பாலகன்.. அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறி நம்ப மறுத்தான். சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான். அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.

இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.

அன்று அங்கு வந்த பாலகன் வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.

அரங்கனின் மந்திர மரக்கால்

திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்துகொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்கிற எண்ணத்துடனும் சிலர் அதை வெறும் கூலி வேலையாகவும் சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். கணக்குப் பிள்ளையை அழைத்து பேசினார். இன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் அவர். அவ்வளவு தான் திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். கணக்குபிள்ளையிடம் இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்பமுடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம் என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு தனியே யோசிக்கிறார்.

நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது. நாம் எதற்கு கவலைப்படுவானேன் என்று மனதை தேற்றிக்கொண்டார். கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி உன் ஆலயத் திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன் அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன் என்று கூறிவிட்டு மறைந்தான். மறுநாள் எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது. நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ. அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ… எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ என சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார்.அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். யாரும் வரவில்லை.

சரி புறப்படலாம் என்று அவர் தீர்மானித்த நேரம் தொலைவில் யாரோ வருவது போலிருந்தது. யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார். ஐயா நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன். இருங்கள் போய்விடாதீர்கள் என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னார். ஆழ்வாருக்கு ஆச்சரியம். என்னைப் பார்க்கவா? ஆமாம் ஐயா உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார். மிக்க மகிழ்ச்சி ஐயா என்று கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார் திருமங்கையாழ்வார். பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லையே என்று கேட்டார். இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப்போகிறது இது நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்து விட்டீர்கள். இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது பொன்னாகிவிடும் என்று கூறி சிரித்தான் அந்த வணிகர்.

அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம் என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார். இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். வணிகரை பார்த்து ஐயா மரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும் என்றார் திருமங்கையாழ்வார்.. இதோ உடனே ஆரம்பிப்போம். இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது. ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னாக மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது. அவர்கள் திருதிருவென விழித்தனர். மரக்கால் பொய் சொல்லாது போங்கள் இங்கே இருந்து என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார். மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி திருமங்கையாழ்வார் செய்தது சரில்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான் என்று குமுறினர்.

வணிகனை பார்த்து நீ மந்திரவாதி தானே உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம் என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர். ஆனால் அந்த வணிகனோ அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான். அனைவரும் வணிகரை துரத்த திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார். வணிகர் அப்படி இப்படி போக்குகாட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன்நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே ஆதனூர் என்னும் தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது திவ்யதேசம். தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கையாழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார். வணிகனாக வந்தது அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம் திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார். இனியாவது சிரத்தையுடன் பணி செய்யுங்கள் என்றார்.அவர்களும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு திருமங்கையாழ்வார் கால்களில் விழுந்தனர். இன்றும் ஆதனூரில் சுவாமி மரக்காலை தலையில் வைத்துப் சயனித்திருப்பார். இடது கையில் எழுத்தாணி ஏடு இருக்கும். இங்கே சுவாமிக்கு படியளக்கும் பெருமாள் என்று பெயர்.

சாளக்கிராமம்

ஒரு மன்னனின் மகள் துளசி மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக என்று சாபமிட்டாள். அந்த கல் தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது.

கிருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன. என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும் துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன் என்றார். அந்த கற்களில் சங்கு சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும் புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போற்றப்படுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன். இங்கே வர முடியாதவர்கள் துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன் என்றார்.

யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம் சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் என்றும் மஹாவிஷ்ணு கூறினார்.

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு ஹிரண்ய கர்ப கற்கள் என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள் சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.