வார்த்தைகள்

மகான் ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். அக்கிராமத்தில் ஒருவர் பலநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க மகான் அவர் வீட்டிற்கு வந்தார். மகான் வந்ததை அறிந்த நோயாளியின் நண்பர்களும் உறவினர்களும் அவரது வீட்டிற்கு வந்தனர். வாடிய உடலோடும் மனமும் சோர்வுற்ற நிலையிலும் இருந்தார் நோயாளி. இதைப் பார்த்த மகான் நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். இறைவனின் அருளால் நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்று மகான் ஆசிர்வதித்தார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் அவரை எப்படி குணப்படுத்தும் வெறும் வார்த்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துமா? என கூறி சிரித்தான். அதற்கு அந்த மகான் இந்த கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள் மூடன் மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார். இதைக் கேட்டதும் அவன் நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்று அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த மகான் முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே. அவை உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உங்களை கோபம் கொண்டவராக மாற்றி விட்டது. இந்த சொற்கள் உங்களை எப்படி தூண்டி கோபம் கொள்ள வைக்கிறதோ அதேபோல் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்த நல்ல சொற்களால் இவரின் உடலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். கோபம் கொண்ட நாத்திகன் மகானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.