ராஜ ராஜ சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய் மொழியாகப் பாடப் பெற்ற தேவாரப் பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலம் சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார். உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலை சுவடிகள் பல செல்லரித்து இருந்தன. மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார். திருதொண்டர் புராணம் நூலானது 12 வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.
பன்னிரு திருமுறைகள்
1 2 3 – ஆம் திருமுறைகள்
திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1 2 3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும் இசையும் மிளரச் செய்கின்றன.
4 5 6 ஆம் திருமுறைகள்
திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4 5 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.
7 ஆம் திருமுறை
சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.
8 ஆம் திருமுறை
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன் ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.
9 ஆம் திருமுறை
- திருமாளிகைத்தேவர் 2. கருவூர்த்தேவர் 3. பூந்துருத்தி நம்பிகாட்ட நம்பி 4. கண்டராதித்தர் 5. வேணாட்டடிகள் 6. திருவாலியமுதனார் 7. புருசோத்தம நம்பி 8. சேதிராயர் 9. சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.
10 ம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் இறைவனைப் பற்றியும் பக்தியோகம் அட்டாங்கயோகம் கர்ம யோகம் ஞானம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.
11 ஆம் திருமுறை
- திருஆலவாயுடையார் 2. காரைக்கால் அம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் 4. சேரமான் பெருமான் 5. நக்கீரர் 6. கல்லாடர் 7. கபிலர் 8. பரணர் 9. இளம்பெருமாள் அடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்தடிகள் 12. நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரண்டு நபர்களால் பாடிய பாடல்கள் 11 ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
12 ஆம் திருமுறை
63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12 ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
முதல் திருமுறையின் முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ஓ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.
பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் உலகெல்லாம் என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ம் என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.
பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
10 ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
11 ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
12 ஆம் திருமுறை பாடல்கள் 63 ஆம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆவணி முதல் ஞாயிறுக்கு முன் 12 நாட்கள் பன்னிரு திருமுறைகள் பற்றிய உரையானது நிகழ்த்தப்படுகிறது. ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று திருமறை காண்டல் என்ற விழா சிவாலயங்களில் நடத்தப்படுகின்றது. நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் எல்லாம் வல்ல இறைவனை ஆராதித்து வாழ்வின் நன்னிலை அடைவோம்.