மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.
சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.
கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.