பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலினை நேர்த்தியாய் செய்ய தட்சனைப் படைத்தார். தட்சனின் மகளாக தாட்சாயிணியாக பிறந்து சிவனை திருமணம் செய்து கொண்டாள் பார்வதி. இதனால் சிவனின் மீது கொண்ட கோபத்தில் தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறார். பலரும் எடுத்துரைத்தும் சிவபெருமானை அழைக்கவில்லை. சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட தாட்சாயிணி தந்தையிடம் சென்று நீதி கேட்கிறார். பின்பு விவாதம் முற்றி தன்னையே யாகத் தீயில் தன்னை அழித்துக் கொள்கிறார் தாட்சாயிணி. மனைவி இறந்தமைக்காக சிவபெருமான் சினங்கொண்டு வீரபத்திரர் என்பவரைத் தோற்றுவித்து தட்சனை அழிக்க உத்தரவிடுகிறார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து இறுதியாக தட்சனின் தலையை வெட்டி யாக குண்டத்தில் போட்டு விடுகிறார். அதன் பின் யாகத்தில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனை சரணடைய இறுதியாக சிவபெருமான் தன் சினம் தணிந்ததும் வீரபத்திரரால் கொல்லப் பட்டவர்களை உயிர்ப்பித்தார். தலைகணம் கொண்ட தட்சனின் தலை குண்டத்தில் போட்டு எரிந்து விட்டதால் சிவபெருமான் அருளால் ஆட்டுத்தலையுடன் தட்சன் உயிர்த்தெழுந்தார். மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன் யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார். கர்நாடாக மாநிலம் கேலடியில் உள்ள ராமேஸ்வரர் கோவிலில் தட்சனின் சிற்பம் ஆட்டுத் தலையுடன் உள்ளது.