குண்டலினி விழிப்படைய எவ்வளவு காலம் பிடிக்கும்?
மனம் ஒடுகினால் குண்டலினி விழிக்கும்.
மனம் என்கிற கருவி ஒடுங்கும் போது குண்டலினி விழிக்கும். மனம் விழிக்கும் பொழுது குண்டலினி உறங்கும். அது கண்ணிமைக்கும் நேரமாக இருந்தாலும் பல மணித்துளிகளாக இருந்தாலும் அது நிகழும். நாம் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது குண்டலினி உறங்கி செயல்படுவதில்லை. அப்போது நம் சக்திகள் அனைத்தும் விரையமாகி விடுகின்றன. பிறகு நாம் ஆழ்ந்து உறங்கும் நிலையில் குண்டலினி விழித்துக் கொள்கிறது. இதனால் நம் உடலெங்கும் நாடி நரம்புகளுக்குள் சக்தி ஓட்டம் நடைபெறுகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது, இறந்த செல்கள் அனைத்தும் உயிர்ப்படைகின்றன. நாடி நரம்புகளில் தடைகள் இருந்தால் ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த இடங்களுக்கு சக்தி ஓட்டம் கிடைப்பதில்லை. இதுவே முதுமை எனப்படுகிறது. எவரொருவர் நாடிகளை சுத்தி செய்து தடைகளின்றி வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு திகழ்வார்கள்.
மனிதன் மூச்சு விடும் பொழுது மனம் வேலை செய்கிறது. மூச்சு நிற்கும் சிலகண நேரத்தில் மனமும் நின்று விடுகிறது. மூச்சு நிற்பது என்றால் நாம் வலிய நிறுத்தி வைக்கும் உயர்வான கும்பகம் ஒன்று ஒவ்வொரு மூச்சிற்கு இடையிலும் நமக்குள் நிகழ்கிறது. இதற்கு கேவல கும்பகம் என்று பெயர். கேவல கும்பகம் நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். நாம் ஒரு மூச்சை உள்ளே இழுத்த பிறகு அதை வெளியே விடுவோம். இந்த இரண்டு செயல்களுக்கும் இடையே ஏற்படும் இடைவெளி தான் கும்பகம் எனப்படுகிறது. இந்த கும்பகம் உள்ளே நிகழும் பொழுது நமது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பியிருக்கும். அதே சமயம் மூச்சை வெளியே விட்டு விட்ட பிறகு மீண்டும் இழக்க வேண்டுமல்லவா? அப்படி இழுப்பதற்கு இடையே ஏற்படும் கால அவகாசத்தில் நிகழ்வதுதான் கேவல கும்பகம். இது நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். இப்படி நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 25000 முறை கேவல கும்பகம் நமக்குள் நிகழ்கிறது. இந்த க்ஷண நேரத்தில் மனம் ஒடுங்குவதால் ஓரளவு குண்டலினி சக்தி விழித்திருக்கும் பொழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. இந்த கேவல கும்பகத்தில் கால அளவை நீட்டிப்பது தான் குண்டலினி யோகம். மனதை நீண்ட நேரம் ஒடுக்க நிலையில் நிறுத்துவது. தியானத்தில் வசப்பட வசப்பட மூச்சும் வசப்பட்டு கேவல கும்பகம் நிகழும் பொழுது யோகி சமாதி நிலையை அடையலாம். இப்படிப் பயிற்சியில் முன்னேறிய சாதகருக்கு ஒரு நாள் குண்டலினி விழிப்பு பெற்று சுழுமுனையை திறந்து கொண்டு சீறிப் பாய்ந்து மேலேறும். யோகி தன் நிலையை தனக்கு குண்டலினி விழிப்பு பெற்றதை உணர்வார்.
சித்தர் பாடல் ஒன்று இரண்டு மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தாரணை என்றும் 24 மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தியானம் என்றும், 12 நாட்கள் மூச்சை அடக்குவது சமாதி என்றும் சொல்கிறது. இதில் சிலருக்கு சந்தேகம் உண்டு. அது என்னவெனில் மூச்சை அடக்கினால் உயிர் பிரிந்து விடாதா என்ற கேள்வி எழுகிறது. மூச்சை அடக்கி விடுவது என்றால் மொத்தமாக அடக்கி வைப்பது அல்ல. உடம்புக்குள் இழுந்த மூச்சை மெதுவாக விடுவதுதான். 4 வினாடிகள் விட வேண்டிய மூச்சுக்காற்றை சாதகம் பயிற்சிகள் மூலமாக நீட்டித்துக் கொள்வதாகும். பொதுவாக நாலு நொடிகளுக்கு ஒரு சுவாசம் நடைபெறும் பொழுது மார்பு விரியும் வயிறு புடைக்கும் உடல் அசைவு கண்ணுக்குப் புலப்படும். அதே ஒரு சுவாசத்தை நாம் ஒரு நிமிட கால அவகாசத்தில் மெதுவாக இழுத்து மெதுவாக விடுவோமேயானால் உடலசைவு பார்பவர்கள் கண்களுக்குப் புலப்படாது. மூச்சு நடைபெறவில்லை என்றே கருதுவார்கள். இப்படிப்பட்ட கடினமான உயர்ந்த யோக நிலையை அடைய 12 ஆண்டுகள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட வேண்டும் என்பதுதான் கோட்பாடு. குருவருளாலும் ஜென்மாந்திரத் தொடர்பாலும் விடா முயற்சியாலும் சிலருக்கு விரைவாகவும் நிகழும். பூரணமாக யோகத்தில் சாதனை புரிய பன்னிரண்டு ஆண்டுகள் விடா முயற்சியுடன் சாதனங்களை கை கொள்ள வேண்டும்.