நம்முடைய பெரியவர்கள் நமக்குப் புரியாத சில விஷயங்களைப் புரிய வைப்பதற்காக கதைகள் புராணங்கள் வாயிலாக பல உண்மைகளையும் கருத்துக்களைச் சொன்னார்கள். கதைகளைக் கேட்டு அதற்குள் இருக்கும் உண்மைகளையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். கதையில் இது சரி இது தவறு என்று விவாதித்துக் கொண்டு இருக்கக்கூடாது
மகாபாரத கதையில் சூதாடக் கூடாது. சூதாடுகிற புத்தி வந்தால் மனைவியை கூட அடகு வைக்கும் நிலை வரும் எனவே சூதாடக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ராமாயண கதையில் சாமவேதம் தெரிந்து பல கலைகளில் வல்லவனாக விளங்கி சிவனை கைலாயத்திலேயே போய் தரிசனம் செய்தாலும் ராவணன் பெண்ணாசையால் அழிந்து போனான். எனவே பெண்ணாசை கூடாது என்ற கருத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
அசுரர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்திருந்தும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் இவற்றினால் அழிந்தார்கள். அவர்கள் கடவுளிடம் வாங்கிய வரமும் பயனில்லாமல் போனது. எனவே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் எனவே இந்த குணங்களை அருகில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
புராணங்களில் ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை உயர்த்திக் கொண்டு போய் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனவன் ஒரு சிறிய தவறு செய்து அதலபாதாளத்தில் விழுகிறான் என்று புரியாதவர்களுக்கும் புரிகிற வகையில் கதைகளாக சொல்லி சிறு தவறு கூட செய்ய எண்ணக்கூடாது என்று நம் பெரியவர்கள் சொன்னார்கள்.
அரிச்சந்திரன் கதையில் எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் உண்மையை பேச வேண்டும் என்று நமக்கு கதை வடிவில் சொன்னார்கள். ஆனால் இப்போது உண்மை பேசினால் அரிச்சந்திரன் மாதிரி வாழ்க்கையில் எப்போதும் சோகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எதிர்மறையாக நினைக்கிறார்கள். தங்களுக்கு எண்ணங்களுக்கு ஏற்றார் போல் கதையின் கருத்துக்களை மாற்றி தத்துவங்களை கருத்துக்களை விட்டுவிட்டு கதைகளை மாத்திரம் பிடித்துக் கொள்கிறார்கள்.