சிவனடியார்

திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும் சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்க்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் அவர்கள் மீதும் பட்டுவிட்டது. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர். சிவனடியாரோடு சிவனடியாராக ஆலயத் தொண்டு புணைய முனைந்து விட்டனர்.

அனுப்பிய தூதர்கள் இருவரும் திரும்பி வராதததைக் கண்டு மேலும் இரு தூதர்களை அனுப்பினான் எமதர்மன். சிவாச்சாரரும் மற்றும் சிவஞானம் பெற்றிருந்த யமதூதர்கள் இருவரும் சேர்ந்து ஆலயப் பிரகாரத்தில் உழவாரபணி மேற்க் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் சிவனடியார் ஆலயப் பிரகாரத்தில் முளைத்திருந்த புற்களை சிவநாமம் சொல்லி பிடுங்கி உதறிக் கொண்டிருந்தார். அப்போது திரும்ப வந்த யமதூதர்கள் இருவரும் சிவாச்சாரரைத் தேடி ஆலயப் பிரகாரம் வந்தனர். புற்களை பிடுங்கி உதறியதிலிருந்து தெறித்த மணல் படிமங்கள் இரண்டாம் முறையாக வந்த எமதூதர்கள் இருவர் மீதும் பட்டது. இவர்களும் சிவஞானம் பெற்று சிவனடியாராக மாறிவிட்டனர். மேலும் அடியார்களோடு அடியாராக ஆலயப் பணியை மேற்கொண்டனர். இரண்டாவதாய் அனுப்பிய இருவரும் திரும்பி வராததால் என்ன ஆயிற்று என நினைத்த எமதர்மன் நாமே நேரில் சென்று பார்க்கலாம் என புறப்பட்டான்.

பிரகாரத்தை சுத்தம் செய்த சிவனடியார் ஈசனுக்கு மாலையில் வழிபாடு செய்வதற்காக வில்வதழைகளைக் கொண்டு வாழைநாரில் தொடுத்துக் கொண்டிருந்தார். சிவச்சாரரைத் தேடி ஆலயம் வந்து பார்த்தான் எமதர்மன். அங்கே சிவாச்சாரருடன் தன் தூதர்கள் நால்வரும் சிவத் தொண்டு செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான். இதைக் கண்டதும் சிவாச்சாரரை ஆவேசத்தோடு நோக்கி என்ன மாயவித்தை செய்து இவர்களை சிவவேலை பார்க்கச் செய்தீர் என்றதுடன் இப்போது நானே வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய் பார்க்கலாம் என்றான் எமதர்மன். சிவ நாமத்தை கூறிக் கொண்டு விழ்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த சிவனடியார்க்கு எமதர்மனின் பேச்சு எரிச்சல் அடையச் செய்தது. திருப்பணி செய்ய விடாமல் இதென்ன தொல்லையா போச்சு என வில்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த வாழைநாரை எடுத்தார். திருவூறல்நாதா எனச் சொல்லி அந்த வாழைநாரை எமதர்மன் மீது எறிந்தார் சிவனடியார். விரைந்த வாழைநார் ஒரு வலையாக உருவெடுத்து எமனின் கை கால்களை கட்டிப் போட்டன. எமன் மந்திரத்துக்கு கட்டுண்டவர் போல செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். நாம எவ்வளவு பாசக்கயிறை வீசியிருப்போம் ஆனால் இந்த சாதாரண வாழைநாரை நம்மால் அறுத்தெறிய முடியவில்லையே என வியந்து சிவாச்சாரரைப் பணிந்தார். சிவனடியாரும் எமதர்மனை பார்த்து இத்தலத்தில் தக்கோலத்தில் சுயம்புநாதராக வீற்றிருக்கும் மகாதேவன் திருவடியை தொழுவாயாக மகாதேவனை சரணடைந்தால் உமக்கு கதிமோட்சம் உண்டாகும் என்று சிவனடியார் எமதர்மனுக்கு வழிகாட்டினார்.

எமதர்மனும் நேராகச் சென்று மகாதேவரை சரணடைந்து வணங்கினான். தஞ்சம் என வருவோர்க்கு அருளுபவன் திருவூறல்நாதன் ஆவார். காலனே இங்கு வந்து சரணடைந்து விட்டதார். எமனுக்குக் காட்சி தந்து என்னடியார்கள் மீது கைவினை செய்யாதே என்று உன்னிடம் பல முறை கூறியுள்ளேன். திருக்கடையூரில் மார்க்கண்டேயனை திருவெண்காட்டில் சுவேதுவை போன்ற என் அடியார்கள் மீது நீ பாசக் கயிறை வீசியிருக்கின்றாய். ஒவ்வொரு முறையும் தவறுவதும் மன்னிப்பதும் நல்லதல்ல என ஈசன் உரைத்து எமதர்மனை கட்டப்பட்டிருந்த வாழைநார் கட்டை விலக்கினார். எமதர்மனும் ஈசனை வணங்கி வழிமொழிந்து புறப்பட்டுச் சென்றான். சிவனடியாராக மட்டும் இருந்து விட்டால் எம பயமில்லை என இருக்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவநெறியில் உறுதிபட இருந்தால் எமனை சிவாச்சாரர் கட்டியது போல எந்த வினையையும் எதிர்க்க முடியும். அதற்கு இந்த சிவாச்சாரியார் சிவனடியார் போல, சுவேது போல, மார்க்கண்டேயர் போல ஞானம் பெறும் வழியில் பயணிக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.