மானச பூஜை

ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால் அது அந்த பிரம்மாவே சொன்னது போல ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான். நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள் என்று தன் ஜாதகத்தை கொடுத்தார். ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். பிறகு தொழிலாளியிடம் ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன் என்றார். ரொம்ப நன்றிங்க ஐயா நான் நாளைக்கு வருகிறேன் என்று தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள் அப்பா ஏன் அவரிடம் அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பி விட்டீர்கள். இன்று வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீர்கள் என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர் அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன் என்றார். இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. ஒரு பாழடைந்த சிவன் கோவிலில் ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

கோவில் சிதிலமடைந்து கிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினான். ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன் என்று நினைத்துக்கொண்டார். அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி கருவறையில் உறையும் இறைவனை வணங்குவது போல் தனது சிந்தனையை ஓடவிட்டார். அப்போது அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார். இவர் வெளியே வந்த அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து சிறு காயத்துடன் தப்பினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை அமர வைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார். ஜோதிட நூல்களை ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால் அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி நேற்றிரவு என்ன நடந்தது? என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார். தான் சென்றபோது மழை பெய்ததையும் அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தில் தான் ஒதுங்கியதையும் சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும் பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார். ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய கும்பாபிஷேகம் அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார். இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள் என்று அவரை வழியனுப்பி வைத்தார் ஜோதிடர்.

அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது. சிவபுண்ணியம் தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த பூஜை அவரை காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் வினை சுருங்குதல். அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு என்று திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் அருளியிருக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.