காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார். தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா? தைப்பொங்கலா? கார்த்திகை தீபமா? கோகுலாஷ்டமியா? ஆருத்ரா தரிசனமா? எது என்று சொல்லுங்கள் என்றார்.
மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் எனக்குப் பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து? என வியந்தனர். அவர் சொன்னார் ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகள்தான் ஏது? நமது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த சங்கரர் ஜெயந்தி எனக்குப் பிடித்த பண்டிகை என்றார்.
ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .
1. பகவானுடைய நாமத்தை ஜபி. பகவத் கீதையைப் படி
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.
3. நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு.
4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். நீ இப்படி தானம் செய்ய வேண்டும் அப்படி தானம் செய்ய வேண்டும் என்று நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களை நம் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் இது மிகவும் உத்தமம் ஆகும். வாழ்க்கை திருப்தியாக வாழ்வதற்கு இதுதான் வழி.
மகா பெரியவர் மூன்றாவதாக சொல்லப்பட்ட உபதேசத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். யார் நல்ல மனிதர்கள் என்று பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவனுக்கு செய்யக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.
ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.
அனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.
எதிர்பார்ப்பு இல்லாத காரணமில்லாத பக்தியை எவன் ஒருவன் இறைவனிடம் வைக்கிறானோ அவனே உண்மையான பக்தன். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். பகவானை பூஜை செய்வது பகவானைப் பற்றி சிந்திப்பது என்பது இன்னொருவன் பாரக்க வேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற திருப்தியுடன் செய்பவனே உண்மையான பக்தன். இதுபோல் பக்தி செலுத்தி இறைவனுடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். உலகியல் ரீதியாக பார்த்தால் அருகில் இருப்பவருடைய குணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. விடுமுறை என்றால் சினிமாவிற்கு செல்லும் நண்பனுடைய நட்பு கிடைத்தால் சினிமாவிற்கே கூப்பிடுவான். கோயிலுக்கு செல்லும் நண்பனின் நட்பு கிடைத்தால் கோயிலுக்கே கூப்பிடுவான். நல்ல சிந்தனையோடு இருப்பவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எல்லோருக்கும் மகா உபதேசங்களை அருளி சனாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கரர். அப்பேர்ப்பட்ட சங்கரரிடம் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதர்களும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜெயந்தியை பெரிய வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாட்சத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று இறைவனை அடையட்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று மகா பெரியவர் நிறைவு செய்தார்.