சுலோகம் -99

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-52

எப்போது உன்னுடைய புத்தியானது மோகம் என்ற சேற்றை முற்றிலுமாக கடந்து விடுகிறதோ அப்போது நீ கேட்டவை பற்றியும் கேட்கப்படுகிறவை இவை இரண்டிலும் உனக்கு வேதனை ஏற்படுத்தாமல் இவ்வுலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கர்ம யோகத்தை கடைபிடித்து வாழ்ந்தால் தூய்மையான மனம் பிறக்கும். அப்போது உள்ள அறிவைக் கொண்டு மோகம் (மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி) என்னும் சேற்றை கடந்து விட்டால் பரம் பொருளை அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும். இதனால் இது வரை நீ கேட்டவை பற்றியும் இனி கேட்கப்படுபவை பற்றியும் உனக்கு கவலை இருக்காது. இந்த உலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -98

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-51

ஞானம் உள்ளவர்கள் தங்களது சமநிலையான புத்தியின் காரணமாக கர்மத்தின் பலனை துறந்து விடுகிறார்கள். இதன் மூலம் பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஞானம் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் சரிசமமான மனநிலையில் இருந்து செய்கிறார்கள். இந்த ஞானம் பெற்ற மனநிலையில் செயல்களை செய்வதினால் செயல்களின் பலனான நன்மை தீமை மற்றும் மகிழ்ச்சி துன்பம் போன்ற அனைத்து விதமான பலன்களும் அவர்களை சென்று சேர்வதில்லை. பலன்கள் கன்மங்கள் ஏதும் இல்லாததினால் இந்த பிறவியில் தங்களுக்கான கடமைகள் முடிந்ததம் அவர்கள் உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மோட்சத்தை அடைகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -97

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-50

சமமான மனநிலையில் இருப்பவன் பாவம் மற்றும் புண்ணியத்தை இந்த உலகத்திலேயே விட்டு விடுகிறான். அதிலிருந்து விடுபடுகின்றான். ஆகையால் சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்கள் திறம்பட செய்யப்படுவது ஆகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பலனை எதிர்பார்க்காமல் சமமான மனநிலையில் செயல்களை செய்பவனை அச்செயலினால் வரும் பலனான பாவம் புண்ணியம் இரண்டும் அவனை பாதிக்காது. பாவ புண்ணியம் இரண்டும் அவனை நெருங்குவதில்லை. அர்ஜூனா இந்த சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்களை திறமையுடன் செய்யப்படுவது ஆகும். இந்த திறமை என்பது என்னவென்றால் செயலை செய்யும் போது இந்த செயலின் பலனான வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரத்தில் மனதை வைக்காமல் வெற்றி தோல்விகளையும் மகிழ்ச்சி துயரத்தையும் இறைவனிடத்தில் அர்ப்பணிப்பதும் ஆகும்.

சுலோகம் -96

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-49

சம நிலையில் உள்ள மனதுடன் கூடிய யோகம் என்பதை விடப் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்தது. ஆகவே அர்ஜூனா சமமான புத்தியில் தஞ்சம் அடைவாய். பலன் மூலம் உந்தப்பட்டு கர்மம் செய்பவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரம் என்று எதுவும் இல்லாமல் சமமான மனநிலையில் செய்யப்படும் செயலானது மிகவும் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மிகவும் தாழ்வானது. ஆகவே அர்ஜூனா சமமான மனநிலையில் எப்போதும் இருந்து செயல்களைச் செய். பலனை எதிர்பார்த்து செயல்களை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பலனை அனுபவிக்க வேண்டி பிறப்பெடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -95

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-48

அர்ஜூனா பற்றினை நீக்கி வெற்றி தோல்விகளை சரிசமமாக எண்ணி தொழில்களை செய். நடுநிலையான எண்ணத்துடன் தொழில்களை செய்வதே யோகம் எனப்படும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு செயல் செய்தாலும் அதன் விளைவாக வரும் பலனான வெற்றியையும் தோல்விகயையும் சரிசமமாக எண்ணி தொடர்ந்து செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி வந்தால் மகிழ்வதும் தோல்வி வந்தால் துயரப்படாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது யோகம் எனப்படும் இந்த யோகத்தில் இருந்து நீ உன் கடமையை செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -94

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-47

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அவற்றின் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரமில்லை. எனவே அந்தப் பலன்களின் மீது விருப்பம் கொள்ளாதே. இதன் காரணமாக தொழில் செய்யாமலும் இருக்காதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய உனக்கு அதிகாரமுண்டு. ஆனால் செய்யும் தொழிலுக்காக பலனை நீ எதிர்பார்த்தால் அதனை நீ அனுபவிப்பவனாக மாறிவிடுவாய் மேலும் அது உன்னை சம்சார பந்தத்தில் பிணைத்து வைத்து விடும். அப்படி நீ இருகக் கூடாது. ஏனென்றால் பலனை எதிர்பார்த்து செயல்களை புரிபவன் அதன் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பான். இப்போது ஒரு சிந்தனை தோன்றும். செயலை செய்து அதற்கான பலனை எதிர் பார்ப்பதை விட செயலை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று தோன்றலாம். ஆனால் விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் போனால் அந்த செயலை செய்ய வேண்டி மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலில் எந்த பலனையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்து முடிப்பாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -93

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-46

எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த நீர் நிலையை அடைந்த பிறகு சிறிய நீர் நிலைகளினால் எவ்வள்ளவு பயன் இருக்கிறதோ பிரம்மத்தை தத்துவ ரீதியாக உணர்ந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன் தான் கிடைக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தண்ணீர் தாகம் கொண்ட ஒருவனுக்கு எவ்வளவு பெரிய நீர் நிலைகள் கிடைத்தாலும் தாகம் தீரும் அளவிற்கே தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்ததும் அவனுக்கு பெரிய மற்றும் சிறிய கிணறு குளம் போன்றவைகள் தேவைப்படாது. அது போலவே மோட்சத்தை தேடும் ஒருவனுக்கு வேதங்களில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தாலும் மோட்சத்திற்கு செல்லத் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வான். மீதி உள்ளதை பற்றி நினைக்க மாட்டான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -92

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-45

அர்ஜுனா வேதங்கள் மூன்று குணங்களின் செயல்களான போகங்களையும் அவற்றின் சாதனை முறைகளையும் தெளிவாக சொல்கின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக இருப்பாயாக. போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக இரட்டைகளாக வரும் நன்மை தீமை இருள் வெளிச்சம் சுக துக்கம் போன்றவற்றிற்று ஆட்படாதவனாக நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று லோக சேமத்திற்காக பொருள் சேர்ப்பது அதனை காப்பாற்றுவது என்பதை விரும்பாதவனாக தனக்கு வசப்பட்ட மனமுடையவனாக ஆகக்கடவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாத்விகம் இராஜசம் தாமசம் என்ற மூன்று குணங்களை வேதங்கள் சொல்கின்றன. மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்விகம் இராஜசம் தாமசம் குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.

  1. சாத்வீக குணம் – மனிதனுக்கு ஞான ஒளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
  2. ரஜோ குணம் – ஆசை பற்று முதலிய குணங்களை அளித்து கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
  3. தாமசகுணம் – மயக்கம் சோம்பல் உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.

மனிதனாக பிறந்தவன் ஏதேனும் ஒரு காரியம் செய்து ஏதேனும் ஒரு வித அனுபவம் பெற்றிருப்பான். இந்த அனுபவத்தில் முக்குணங்களின் கலவை அல்லது ஒரு குணமாவது நிச்சயமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இந்த உடலினாலும் அல்லது அதன் மூலம் செய்யப்படும் எந்த ஒரு செயலினாலும் வரும் பயன்கள் நம்முடையது அது நமக்கு வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும். இதன் பயனாக மனிதர்களுக்கு இரட்டையாக வரும் மகிழ்ச்சி துயரம் மற்றும் விருப்பு வெறுப்பு இவற்றிற்கு ஆட்படாமல் சரிசமமான மனதுடன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். இதன் பயனாக நித்யப் பொருளான பரம்பொருளை இடைவிடாமல் சிந்தனை செய்து கொண்டு அதிலேயே மனம் அசையாமல் நிலைத்து நிற்கலாம். அதன் பயனாக உலக பொருள்களின் மீது பற்றோ அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது.

மனம் புத்தி புலன்கள் இவை மூன்றும் நம் வசத்தில் இல்லாதவரை இவை நமக்கு எதிரிகளாக இருக்கின்றன. இவற்றை தன் வசப்படுத்தியவன் மட்டுமே தன்னை கட்டுப்படுத்தியவன் ஆவான். ஆகவே அர்ஜூனா உன் மனம் புத்தி புலன்களை கட்டுப்படுத்தி உனக்கு வசப்பட்ட மனமுடையவனாக மாறுவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -91

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-44

இவர்கள் தங்களின் பேச்சு மற்றும் செயல்களினால் தங்கள் அறிவை இழந்து நிற்கிறார்கள். மேலும் மேலும் சொர்க்கத்தை அனுபவிப்பதிலேயே ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவற்றவர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு அவர்களுக்கு கர்ம யோக புத்தி உண்டாக வாய்ப்பே இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வாறான பேச்சு மற்றும் செயல்களினால் தங்களின் சுய சிந்தனையை விட்டு அறிவை இழந்து நிற்பார்கள். அனுபவிக்கும் சுகமே சொர்க்கம் என்று பந்தம் பாசம் ஆகியவற்றை அனுபவிப்பதிலேயே ஆர்வத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படாது. இவர்களுக்கு கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும் புத்தியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

சுலோகம் -90

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-43

இவர்கள் உலகியல் இன்பத்தில் திளைத்தவர்களாகவும் சொர்க்கத்திற்கு செல்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கவல்லதும் கர்மங்களில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் ஆகிய பேச்சுக்களை மட்டுமே பேசுவார்கள். மேலும் தங்களுக்கு இன்பத்தையும் போகத்தையும் கொடுக்கும் செயல்களையே செய்து வருவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இல்லறமே நல்லறம் என்ற வரிகளின் உள் விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் வரிகளின் விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதுவே சிறந்தது இதனை அனுபவித்தால் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டு பாசம் பந்தம் ஆகியவற்றிற்குள் சிக்கி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கும் கர்மங்களிளேயே ஈடுபட்டுக் கொண்டு அதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.