பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #2
அர்ஜூனா இத்தகைய தகாத நேரத்தில் இந்த வருத்தம் உன்னை எந்த காரணத்தினால் பீடித்தது? உனது கருத்து சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது. சொர்கத்தை அளிக்காது மேலும் பெருமைக்கு இழுக்காகி விடும்.
இந்த சுலோகத்தில் சொல்லப்படும் கருத்து என்ன?
முதல் அத்தியாயத்தில் அர்ஜூனன் சொன்னவற்றை கேட்ட கிருஷ்ணர் இப்போது பேச ஆரம்பிக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இருக்கும் இறுதி நேரத்தில் அர்ஜூனன் யுத்தம் செய்ய மறுப்பதால் இந்த நேரத்தை தகாத நேரம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பெரிய மகாரதர்களையும் வெற்றி பெறக்கூடிய அர்ஜூனனுக்கு யுத்தத்தில் இருந்து பின் வாங்கும் இந்த கோழைத்தனம் எப்படி வந்தது என்று கேட்கிறார். இந்த கோழைத்தனத்தினால் உனது கடமையை செய்ய மறுக்கிறாய். கடமையை செய்ய மறுப்பவனுக்கு சொர்க்கம் இல்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். மேலும் அர்ஜூனன் யுத்தத்தில் யாராலும் வெற்றி பெற முடியாதவன் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாக இருக்கிறான். இப்போது யுத்தத்தில் இருந்து பின் வாங்கினால் யுத்தத்திற்கு அர்ஜூனன் பயப்படுகிறான் என்ற அவச்சொல் ஏற்பட்டு அவனது பெருமைகள் அனைத்துப் அழிந்து போகும். யுத்தத்தில் இருந்து பின் வாங்க அர்ஜூனன் சொல்லும் காரணங்கள் அனைத்தும் இதற்கு முன்பாக இருந்த முன்னோர்கள் யாரும் கடைபிடிக்காதவைகள் ஆகும் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார்.
இந்த சுலோகத்தில் சான்றோர் என்ற தமிழ் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற சொல் வருகிறது. அதற்கு பொருள் என்னவென்றால் அறவழியில் நிற்பவனும் ஆசைகளுக்கு அடிபணியாதவனும் பண்பட்ட மனமும் இறைவனை நோக்கிச் செல்லும் சிறந்த வாழ்க்கை முறையை கொண்டவன் எவனோ அவனே ஆரியன் என்றும் தமிழில் சான்றோன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.