பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-62
புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் வருகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இறைவனின் மீது தனது மனதை வைக்காதவனின் சிந்தனையானது உலகத்தில் உள்ள போகப் பொருட்களின் மீது சென்று கொண்டே இருக்கிறது. அந்த பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதினால் அந்தப் பொருட்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று உண்டான பின் அவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆசையை அனுபவித்து விட்டால் இதை விட பெரிய ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று மனமானது மேலும் ஆசைப்படுகிறது. ஆசையை அனுபவிக்க சூழ்நிலை இல்லை என்றாலோ தடங்கல் ஏற்பட்டாலோ அதற்கு காரணமானவர் மீது கோபம் வருகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.