பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #28
இந்த உயிர் என்பது பிறப்பதற்கு முன்னால் தென்படுவதில்லை. இறந்த பின்னரும் தென்படுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தென்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் ஏன் அதனை நினைத்து வருந்த வேண்டும்?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
தூங்கும் போது கனவில் தோன்றும் உருவம் தூக்கம் கலைந்ததும் போய் விடும். கனவிற்கு முன்பும் அந்த உருவம் இல்லை. கனவிற்கு பின்பும் அந்த உருவம் இல்லை. தூங்கும் காலத்தில் மட்டும் ஒரு விதமான மாயையில் அந்த உருவம் தெரியும். அது போலவே இந்த உலகத்தில் பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உயிரினங்கள் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக பார்க்க முடியாதவர்களாகவும் அறிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் வாழ்வதற்கு உரிய காலம் வந்ததும் அவர்களுக்கு உடல் மற்றும் அவற்றிற்கான உறுப்புகள் அனைத்தும் தோன்றுகிறது. வாழும் காலம் முடிந்ததும் அவர்களின் உடல் அவற்றின் உறுப்புகள் அனைத்தும் அழிந்து போகிறது. அதன் பிறகு அவர்களை பார்க்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வாழும் வாழ்க்கை கனவில் வரும் மாயை போன்றது. இவர்களை நினைத்து நீ வருந்த வேண்டியதில்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.