பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #29
பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான். பலரில் ஒருவர் மட்டுமே இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார். பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவைப் பற்றி வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்படி ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?
பலரில் ஒருவன் இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான் இதன் கருத்து என்ன?
உலகில் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது அது அழியாதது நித்தியமானது என்று தனது மனம் புத்தி அறிவு ஆகியவற்றால் தேடி சிந்தனை செய்து தெரிந்து கொண்டவர்கள் பலரில் ஒருவனே. தெரிந்து கொண்டதும் அவன் அதனை வியப்பாக பார்க்கிறான். அவனால் ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர ஆத்மாவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆத்மாவனது உணரக்கூடிய பொருள் ஆகும். அறிந்து கொள்ள முடியாதது.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?
பலரில் ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார் இதன் கருத்து என்ன?
இந்த உலகில் உள்ள எண்ணற்ற மனிதர்களில் ஒருவர் தான் செய்யும் பெரும் தவம் காரணமாக தனது பாவங்களை முழுமையாக தீர்த்து ஞானியின் உயர்ந்த நிலையை அடைந்து ஆத்மாவை காண்கிறார். அந்த ஆத்மாவின் தன்மைகள் இது வரை உலகில் உள்ள பொருட்களின் தன்மைகளையும் தத்துவத்தையும் விட மாறுபட்டதாகவும் இதுவரை காணததாகவும் காண்கிறார். இதனை தனது சீடர்களுக்கோ அல்லது தகுதியானவருக்கோ ஆத்மாவின் தத்துவத்தை போதிக்கும் போது எத்தனை தத்துவங்களை உதாரணம் காட்டி ஆத்மாவின் தத்துவத்தை விளக்கினாலும் பரிபூரணமாக ஆத்மாவின் தத்துவத்தை விளக்கிச் சொல்ல அவரால் முடியாது. ஏனெனில் ஆத்ம தத்துவத்திற்கு இணையான வேறு தத்துவம் எதுவும் உலகில் இல்லை. ஆத்ம தத்துவத்தை சொற்களால் சொல்லி புரியவைக்க முடியாது. ஆகவே ஞானியானவர் எத்தனை உதாரணங்களை காட்டி ஆத்மாவின் தத்துவத்தை போதித்தாலும் அதனை வியப்பாகவே பேசுகிறார். ஆனாலும் அவரால் அதன் தத்துவத்தை முழுமையாக விளக்கிச் சொல்ல முடியாது. ஏனெனில் ஆத்மாவை சொற்களால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆத்மா உணரக்கூடிய பொருள் ஆகும்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?
ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் இதன் கருத்து என்ன?
பலரில் ஒருவன் இது நாள் வரை தான் கண்ணால் கண்ட உடம்பும் அதன் உறுப்புகளுமே நான் என்று தெரிந்து வைத்திருக்கிறான். ஞானியின் போதனைகள் வழியாக ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அவன் தெரிந்து வைத்திருந்த அனைத்தும் அழியக்கூடியது என்றும் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த உடம்பிற்குள் அழியாத பொருளாகிய ஆத்மா என்று ஒன்று உள்ளது அது அழியாதது என்றும் அவன் ஞானியிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது வியப்புடன் கேட்கிறான்.
இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி?
ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான். இதன் கருத்து என்ன?
ஆத்மாவானது பாவங்கள் கர்மங்களை அனைத்தும் தீர்ந்த பிறகு உணரக்கூடிய பொருளாகும். அதனை கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.