பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #10
பரத குலத் தென்றலே திருதராஷ்டிரரே கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கு நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனிடம் சிரித்தார் போல் இந்த வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?
திருதராஷ்டிரரை பரதகுலத் தென்றல் என்று சஞ்சயன் ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்?
பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல் படுத்தினார்கள். ஆனால் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் பல முறை மறைமுகமாக எச்சரித்து விட்டான். இந்த யுத்தம் நடந்தால் யுத்தத்தில் கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் புதல்வர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று ஆனாலும் திருதராஷ்டிரர் தனது மகன் துரியோதனன் செய்யும் அதர்மமான செயலுக்கு துணை செல்வது போல் எந்த முடிவும் எடுக்காமல் தென்றல் போல் அமைதியாகவே இருக்கிறார். ஆகவே பரத குலத் தென்றலே என்ற வார்த்தையை சஞ்சயன் குறிப்பிட்டு சொல்கிறான்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?
மேற்கண்ட சுலோகங்களில் அர்ஜூனன் சொன்னவைகள் அனைத்தையும் கேட்ட கிருஷ்ணர் ஏன் சிரித்தபடியே பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்?
அர்ஜூனன் தர்மத்தை காக்க யுத்தம் செய்து தனது வீரத்தைக் காட்டுவதற்காக யுத்தகளத்திற்கு வந்துவிட்டு வருந்திக் கொண்டிருக்கிறான். என்னை சரணடைந்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டு நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே யுத்தம் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டானே என்று கிருஷ்ணர் தனது மனதிற்குள்ளாக எண்ணி அர்ஜூனனை பார்த்து சிரித்தார்.