பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #11
நீ துக்கப்படத் தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும் பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?
துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் யாரை குறிப்பிடுகிறார்?
கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக வந்திருப்பவர்கள் அனைவரும் அதர்மத்திற்கு துணை நிற்பவர்களே. அதர்மத்திற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் தர்மத்தால் அழிக்கப்படுவார்கள். இவர்கள் அழிந்தால் அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இவர்களையே துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் இங்கு குறிப்பிடுகிறார்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?
அர்ஜூனனை பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய் என்று கிருஷ்ணர் எதனால் கூறுகிறார்?
அர்ஜூனன் முதல் அத்தியாயத்திலும் 2 வது அத்தியாயத்திலும் குலநாசத்தினால் வரும் பெரிய பாவங்களை எடுத்துக் காட்டியும் மேலும் பல விதமான கருத்துக்களை கிருஷ்ணரிடம் சொல்லியும் யுத்தம் செய்வது சரியில்லை என்று பேசினான். அர்ஜூனன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உயர்வான நீதி சாஸ்திரங்களைப் படித்து அவற்றை விளக்கும் பண்டிதர்களின் கருத்துக்களைப் போல இருந்ததால் அவனை பண்டிதர்கள் போல பேசுகிறாய் என்று கிருஷ்ணர் கூறினார்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?
உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் ஏன் கூறினார்?
பண்டிதர்களின் பார்வையில் ஆனந்த மயமான பொருள் ஒன்று தான். அது அழியாதது. அதைத் தவிர உலகில் அழியாத வேறு பொருள் எதுவும் இல்லை. அதுவே எல்லாவற்றிற்குள்ளும் இருக்கின்ற சோதி வடிவான ஆத்மா. அதற்கு எந்த விதத்திலும் அழிவு ஏற்படாது என்று நன்கு உணர்ந்தவர்கள் பண்டிதர்கள். மேலும் இந்த உலகிலுள்ள உயிர்கள் தங்களின் ஐந்து புலன்களின் மூலம் பார்ப்பவைகள் கேட்பவைகள் உண்பவைகள் முகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் தவிர்க்க முடியாத கனவு போன்ற மாயையால் ஆகியது என்பதையும் தெரிந்து கொண்டதால் அனைத்தும் இறைவன் செயலே என்று இருப்பார்கள். அதனால் இறந்தவர்களை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள். இருப்பவர்களை நினைத்து வருத்தப்படவும் மாட்டார்கள். இதனை வைத்து பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அதர்மம் செய்பவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் நினைத்து துக்கப்படத் தேவையில்லை. ஏனெனில் அதற்கான தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றும் மேலும் அர்ஜூனன் பண்டிதர்களைப் போல் பேசினாலும் பண்டிதர்களைப் போல் முடிவு எடுக்கவில்லை. ஆகையால் நீ பண்டிதன் அல்ல ஆனால் பண்டிதன் போல் பேசுகிறாய் அவ்வளவு தான் என்று அர்ஜூனனுக்கு உணர்த்தி அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இருந்து பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.