பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-6
மனதையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தி இல்லாதவனுக்கு மனதில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே பாவனை இல்லாதவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் ஏது?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ளாதவனுக்கு நிலையான புத்தி இருக்காது. எந்த செயலை செய்தாலும் நிலையில்லாத புத்தியானது அதனை முதலில் சரி என்று சொல்லும் சிறிது நேரத்தில் இது சரியில்லை என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு புத்தியானது தடுமாறிக் கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையும் தியானமும் வராது. இதனால் இவர்களது மனதில் அமைதி என்றும் இருக்காது. அமைதி இல்லாதவனுக்கு வாழ்க்கையில் இன்பம் என்பது இருக்காது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.