பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #14
குந்தியின் மைந்தனே புலன்கள் தொடர்பு கொள்ளும் பொருட்கள் மூலமாக வெப்பம் மற்றும் குளிர் போன்றவை உடலுக்கு துன்பம் மற்றும் சுகத்தை அளிக்கின்றன. அவை வந்து போவது இயற்கையாகவே நடக்கிறது. விரைவில் அவை அனைத்தும் அழிந்து விடும் தன்மையுடையவை அநித்யமானவை ஆகவே பாரத நீ அவற்றை பொறுத்துக் கொள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உடம்பில் உள்ள கண் காது மூக்கு வாய் உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களும் தன்னை சுற்றி உள்ளவற்றோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடனேயே இருக்கிறது. உணர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் வெயில் அதிகமான காலங்களில் ஏற்படும் வெப்பம் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே வெயில் குளிர் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். குளிர் அதிகமான காலங்களில் ஏற்படும் குளிர் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே குளிர் வெயில் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். சில நாட்களில் அந்த இன்பமும் துன்பமும் மறைந்தும் போகிறது. இது போல் மீதமுள்ள 4 புலன்களின் வழியாகவும் இன்பமும் துன்பமும் ஏற்பட்டாலும் அவை சில மணி நேரத்தில் மறைந்து அழிந்து விடுகிறது. தன்னை சுற்றி உள்ள பொருட்களுடன் ஏதேனும் வகையில் புலன்கள் தொடர்பு கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன. விரைவில் இந்த இன்பமும் துன்பமும் அழிந்தும் போகின்றது. இது இயற்கையானது நிரந்தரமில்லாதது. ஆகவே அர்ஜூனா நீ பார்ப்பவைகள் கேட்பவைகள் நுகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் சிறிது நேரத்தில் அழிந்து போகும் இவற்றை பொறுத்துக் கொள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.