பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-69
அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ அப்போது மன உறுதியுடையவன் விழித்துக் கொண்டிருக்கிறான். போகங்களை அனுபவிக்க பகலில் எப்போது உயிரினங்கள் விழித்திருக்கின்றனவோ அப்போது மன உறுதியுடையவன் அந்த நேரத்தை இரவு நேரமாக எடுத்துக் கொள்கிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த சுலோகத்தில் இரவு பகல் என்று குறிப்பிடுவது சூரியன் இருக்கும் பகலையும் சூரியன் மறைந்தவுடன் வரும் இருட்டையோ அல்ல. ஐம்புலன்கள் மனிதனை ஆசையின் பக்கம் இழுத்துச் செல்லும் போது அவன் மாயை என்னும் இருட்டில் மயங்கி அதன் பின் செல்கிறான். ஆனால் மன உறுதியுடையவன் மாயை என்னும் இருட்டில் மயங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். அனைத்து உயிரினங்களும் தனது கர்மாக்களை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி வந்தால் மகிழ்ச்சி அடைந்து கொண்டும் துன்பம் வந்தால் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடையவன் மகிழ்ச்சி துன்பம் எது வந்தாலும் இரவு நேரத்தில் தூங்கும் போது அமைதியாக இருப்பது போல் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.