பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #31
அவ்வாறே தன்னுடைய சுயதர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில் க்ஷத்திரியன் ஒருவனுக்கு தர்மத்தின் வழி நடக்கின்ற போரைக் காட்டிலும் வேறு ஒரு நன்மை தரும் கடமை கிடையாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இப்போது தொடங்கியுள்ள இந்த யுத்தத்தில் உயிர்களை கொல்வது என்பது தவிர்க்க இயலாது. இவ்வாறு கொல்வது அந்த உயிர்களை வதை செய்வது போன்றதாகும் என்று எண்ணி உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நீ விடக்கூடாது. இறப்பவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. ஏனெனில் அவர்கள் இந்த உடலை விட்டாலும் வேறு உடலுக்குள் சென்று விடுவார்கள். உனது வாழ்வில் யுத்த தர்மம் என்பது க்ஷத்திரியனுக்குரிய தர்மமாகும். யுத்த தர்மத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நீ வருந்துவது உனக்கு தகாது. க்ஷத்திரியனுக்கு தர்மத்திற்காக நடைபெறும் யுத்தம் என்பது இயற்கையாகும். இந்த யுத்தங்கள் தர்மத்தை நிலைநாட்டவும் மக்களை காக்கவும் ஆகும். அதன் விளைவாக நாட்டை கைப்பற்றுதல் நிகழ்கிறது. இது தர்மமான செயலே ஆகும். க்ஷத்திரியன் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தர்ம யுத்தத்தை விட வேறு எதுவும் நன்மை தராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.