பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #32
அர்ஜூனா தர்ம யுத்தம் என்ற இந்த அபூர்வமான நிகழ்வு உனக்கு தானகவே அமைந்துள்ளது. இது போன்ற தர்ம யுத்தங்கள் மோட்சத்தின் கதவுகளை திறக்கவல்லவை ஆகும். இத்தகைய தர்ம யுத்தத்தை பாக்கியமுடைய ஒரு சில க்ஷத்திரர்கள் மட்டுமே பெற முடியும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
பேராசைக்காகவோ சுய நலத்திற்காகவோ அல்லது நாட்டையும் அதிலுள்ள சுகங்களையும் அடைந்து புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை பாண்டவர்களாகிய நீங்கள் செய்யவில்லை. தர்மம் நிலை பெற வேண்டும் என்று அதர்மத்திற்கு எதிரான யுத்தம் இது. இந்த யுத்தம் நீ தேடிச் சென்றோ நீ விரும்பியோ வரவில்லை. தானாகவே உனக்கு அமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தில் உன்னைப் போலவே பேராசைக்காகவும் சுய நலத்திற்காகவும் இல்லாமல் தர்மத்திற்காக யுத்தம் செய்து இறந்து போகும் வீரர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய தர்ம யுத்தங்கள் பாக்கியமுடைய க்ஷத்திரர்களுக்கு மட்டுமே அமையும். உனக்கு அதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆகையால் யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.