பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-40
கர்ம யோகத்தின் மூலம் தொடங்கப்பட்ட முயற்சிக்கு அழிவில்லை. இந்த முயற்சியில் பாவங்கள் ஏற்படுவதில்லை. இந்த கர்ம யோகம் என்ற தர்மத்தை சிறிதளவு கடைபிடித்தால் கூட இந்த தர்மமானது சம்சார பந்தம் என்ற பிடியில் இருந்து காப்பாற்றும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
கர்ம யோகம் என்பது செய்கின்ற செயல்களில் பலனை எதிர்பார்க்காமலும் வருகின்ற பலன் மீது பற்று வைக்காமலும் தொடர்ந்து செயலாற்றுதல் ஆகும். கர்ம யோகத்தை கடைபிடிக்க ஆரம்பித்த சாதகர் அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டு விட்டாலும் ஆரம்பத்தில் செய்த கர்மத்தின் பலனானது அழிவதில்லை. அது சாதகரின் உள்ளத்தில் விதை போல் ஊன்றி நின்று சாதகரை மீண்டும் இந்த யோகத்தை செய்ய உந்துதலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த கர்ம யோகத்தை சரியாக செய்யும் போது ஏதேனும் தெரியாமல் தவறு செய்துவிட்டாலும் கூட பாவங்கள் ஏற்படாது. இந்த கர்ம யோகத்தின் தர்மமானது சம்சார பந்தம் என்னும் பிடியிலிருந்து காப்பாற்றி மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும்.