சாங்கிய யோகம் முன்னுரை
சாங்கிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணிதம் என்று பொருள். கணிதம் என்றால் ஏதோ கணக்கு வாய்ப்பாடு கூட்டல் கழித்தல் என்று பொருள் அல்ல. தர்க சாஸ்திரத்தில் கேள்வி கேட்டு விவாதம் செய்து அதற்கு விளக்கம் சொல்லி புரிய வைப்பது போல அறிவை அகலப்படுத்துவதற்கு கணிதம் செய்தல் என்று பொருளாகும். விஷாத யோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆத்ம தத்துவத்தையும் சுய தர்மத்தையும் கர்ம யோகத்தின் சொரூபத்தையும் இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். மற்ற அத்தியாயங்களை விட இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்துவ உபதேசங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இந்த அத்தியாயம் சாங்கிய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் 72 சுலோகங்கள் உள்ளது.
பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #1
சஞ்சயன் கூறினான். இப்படி மனம் முழுவதும் இரக்கம் நிறைந்தவனாக கண்களில் நீர் பெருகிக் கலங்கிய கண்களும் நிலைகுலைந்த உள்ளமும் உடையவனாக அர்ஜூனன் நின்றான். அவனைப் பார்த்து மதுசூதனன் பேசத் துவங்கினார்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சஞ்சயன் கிருஷ்ணரை ஏன் மதுசூதனன் என்று குறிப்பிட்டு கூறுகிறார்?
மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவர் மதுசூதனன் என்று பெயர் பெற்றார். மது என்னும் அரக்கனை கொன்றது போல உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மேல் உள்ள இரக்கத்தினாலும் கருணையினாலும் யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜூனனின் கவலைகளையும் அவனது குழப்பங்களையும் கொன்று அர்ஜூனனின் மனதை தெளிவிக்கப்போகிறார் கிருஷ்ணர். அதன்பின் உனது மகன்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக மதுசூதனன் என்ற பெயரை சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்.