பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை கிருஷ்ணரை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின் பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு சத்திரம் ஒன்றில் தங்கினார். நடுஇரவில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல் அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான். தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர் வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார். அப்பண்ணா ஒன்றுடம் சொல்லாமல் படுக்கச் சென்று விட்டார். பின்பு தமது செயலைக் குறித்து வருந்தினார். நிம்மதியாகத் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவை படுத்திருக்கும் இடத்திற்குஞ் சென்று நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அப்பண்ணா ஆச்சரியமாகி நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே என்றார். புரந்தரதாசர் குழம்பினார். நீராடி விட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில் கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணரே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும் புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும் என்று கண்ணீர் சிந்தினார். கிருஷ்ணரின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடினார். புரந்தரதாசர் கோவிலில் இருக்கும் கருட கம்பம் என்ற ஒரு தூணின் கீழ் அமர்ந்து பாடினார். இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர். அந்த தூணுக்கு வெள்ளியால் காப்பு போடப்பட்டிருக்கிறது.