ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற பாடல் ஆதிசங்கரரால் முருகனைப் போற்றி வடமொழியில் இயற்றப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூலின் பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்புவதற்காக வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்தார். ஆதிசங்கரரின் வேத ஞானத்தைக் கண்டு அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஆதிசங்கரர் மீது தீய ஏவல் செய்தார். ஏவலுக்கு உட்பட்ட ஆதிசங்கரர் காசநோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்றார். உடல் நலிவுற்ற நிலையில் ஒரு நாள் காலையில் திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது அவருடைய கனவில் சிவபெருமான் தனது விடை மீது காட்சியளித்தார். சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின் அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் (திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு) என் குமாரன் சண்முகன் இருக்கிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும் என்று சொல்லி ஆதிசங்கரரின் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஆதிசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் நெற்றியிலும் கைகளிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்தியினால் தன் உடலை விட்டு சூட்சுமமாக பிரிந்து ஜெயந்திபுரம் அடைந்து சண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் சண்முகநாதனின் கமல பாதங்களை ஒரு பெரிய நாகபாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் புஜங்கம் என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களை ஆதிசங்கரர் பாடினார்.
ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் வட மொழி இசை வடிவில்
ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் தமிழாக்கம்
- தீராத இடர் தீர
என்றும் இளமை எழிலன் எனினும் இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும் சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன் நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும் உதவும் மங்கள மூர்த்தமதே.
- புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன் சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன் தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும் தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
- திருவடி தரிசனம் கிட்டும்
மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக் கந்தன் பதம் பணிகுவாம்.
- பிறவிப் பிணி தீரும்
என்றன் சந்நிதி யடையும் மனிதர் எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச் செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான் தூயன் பாதம் துதிக்கின்றேன்.
- போகாத துன்பம் போகும்
கடலில் தோன்றும் அலையும் அழிந்து காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார் தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல் ஏற்றித் தியானம் செய்கின்றேன்.
- கயிலை தரிசன பலன் கிட்டும்
என்றன் இருக்கை யறிந்தே யெவரும் இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும் இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக் கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த் திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.
- கரையாத பாவம் கரையும்
கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர் கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய் குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான் அவனைச் சரண மடைகின்றேன்.
- மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர் மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும் இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர் சித்தம் சாந்தி யுறும்.
- புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து பொலிவு பெற்றே வாழட்டும்.
- அக இருள் நீங்கும்
பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித் தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
- ஆபத்து விலகும்
வேடவேந்தன் திருமகள் வள்ளி விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த குமரன் மார்பைப் போற்றுகிறேன்.
- பிரம்ம ஞானம் கிட்டும்
வேதன் தலையில் குட்டிய கை விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய் வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும் கந்தா என்னைக் காத்திடுக.
- தாபங்கள் நீங்கும்
சந்திரர் அறுவர் வான் வெளியில் சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும் தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும் நின் கருணை முகத்திற் கெதிராமோ.
- அமுத லாபம் ஏற்படும்
அன்னம் அசைதல் போல் நின் புன்னகை அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச் சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.
- கிருபா கடக்ஷம் கிட்டும்
விண்ணிலும் விரிந்த கருணை யதால் வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும் படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால் ஏது குறைதாந் உனக்கெய்தும்.
- இஷ்டசித்தி ஏற்படும்
மறைகள் ஆறு முறை யோதி வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின் எழுந்த கந்தா முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள் திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.
- சத்ருபயம் போகும்
இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள் வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா செந்தில் தலைவா வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி வருக என்றன் கண்முன்னே.
- ஆனந்தம் ஏற்படும்
வருக குமரா அரு கெனவே மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே பரமன் மகிழ்ந் தணைக்கும் முத்தே இளமை வடிவுடைய
ஒரு சேவகனே கந்தா நின் உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.
- கர்மவினை தீரும்
குமரா பரமன் மகிழ் பாலா குகனே கந்தா சேனாபதியே
சமரில் சக்தி வேல் கரத்தில் தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா எம் குறைகள் தீர்க்கும் வேலவனே
அமரில் தாரகன் தனை யழித்தாய் அடியன் என்னைக் காத்திடுக.
- திவ்ய தரிசனம் கிட்டும்
தயவே காட்டும் தன்மை யனே தங்கக் குகையில் வாழ்பவனே
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப் பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன் ஆறுமுகா நீ தோன்றுகவே.
- எமபயம் தீரும்
காலப் படர்கள் சினம்கொண்டு கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன் உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து பயமேன் என்னத் தோன்றுகவே.
22 அபயம் கிட்டும்
கருணை மிகுமோர் பெருங் கடலே கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர் அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென் எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ அசட்டை செய்ய லாகாது.
- கவலை தீரும்
அண்ட மனைத்தும் வென் நங்கே ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும் ஒருவனக் கொல்லுத லாகாதோ?
24.25. மனநோய் போகும்
துன்பச் சுமையால் தவிக்கிறேன் சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால் ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும் நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.
- நோய்கள் தீர
கொடிய பிணிகள் அபஸ் மாரம் குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள் குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன் மாயம் போலப் பறந்திடுமே.
- சராணாகதி பலன் கிட்டும்
கண்கள் முருகன் தனைக் காணக் காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும் பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல் எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம் கலந்து மகிழ்ந்து குலவட்டும்.
- வரம் தரும் வள்ளல்
முனிவர் பக்தர் மனிதர்கட்கே முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள் தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும் மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று கருணை வடிவைக் காண்கிலனே.
- குடும்பம் இன்புறும்
மக்கள் மனைவி சுற்றம் பசு மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர் யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச் சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ் குமரா எமக்குக் கதிநீயே.
- விஷம் நோய் போகும்
கொடிய மிருகம் கடும் பறவை கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன் கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த முருகா வருக முன் வருக.
- குற்றம் குறை தீரும்
பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக் குறை யில்லாமல் காத்தருள்க.
- ஆனந்தப் பெருமிதம்
இனிமை காட்டும் மயிலுக்கும் இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும் தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும் கந்தா வணக்கம் வணக்கமதே.
- வெற்றி கூறுவோம்
ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம் திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம் முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்
- வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன் எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள் சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்.
விளக்கம்
எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலை போல் விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான். எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம் தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான். இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க வந்திங்கு தேடும் வல்லபை கணேசன் மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன் என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன். வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன். உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன். நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன். உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன். எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின் உள்ளே புகுந்தது ஒராறு முகமும் சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன். பாட்டு வெள்ளமாய் பொங்கி பெருகிட மயிலேறி வந்தான் மகாபாக்யப் பொருளாய் உயிரில் கலந்தான். உள்ளம் கவர்ந்தான். அழகுக்கு இவன் தான் அணியாக நின்றான். முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்யாருக்கும் எளியன் வேதப் பொருளாய் பாரெல்லாம் காப்பான். ஈசன் குமாரன் ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று கூறுவான் போல கடலோரம் நின்றான் செந்தில் வேலன். சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல் வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான். கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான். கந்தமாகெனமெனும் விந்தையூரிலே வந்து கால் வைப்பர் கைலாயம் காண்பரே என்று நீ சொல்வதாய் சொல்வதோர் சண்முகம் சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள் செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தனை.
சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள கந்த மாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர் மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில் கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான் கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும் சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும் அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம் நெஞ்சமாம் அதில் தோய்ந் திளைப்பாடுக பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான். செந்தில் குமாரா எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும் வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்கும மாமுருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக.
தாரகனின் பகைவா ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளும் கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும். ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலோய். நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமராராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வலை மணிமாலை ஆரங்கள் சூழ ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்.
கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம் கதி கலங்கி கண் கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கிப்பற்றி எனையிழந்து உயிர் பிரியும் நேரம் நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு கட்டிவா என்றெல்லாம் எமதூதர் கூறும் துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில் மேல் வெற்றி வேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு வாய் பேச முடியாது வருந்துகிற நேரம் தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும் ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும். என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும். சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை கூர் வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக தீராத கவலைகள் தீர்த்திடவே வருக. யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்? மனக் கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும் உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்.
அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால் எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய் காக்கை வலி நீரிழிவு சயம் குஷ்டம் மூலம் ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராதரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த உடனே காதவழி ஓடும் கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே எந்நாளும் உன் பணியில் உன் புகழை பேச பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர் கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய் அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார் சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய் மனைவி மக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர் அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும் எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள் எது எனினும் உன் வேலால் பொடி படவே வேண்டும் குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய். பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க முருகா. உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம். செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா மொழி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும்.
We use to hear Kandhar shashti kavacham daily
But only now we realised this famous Subramanyam bhujangam composed by Athi Sankarar periyavar. The songs are melodious and very auspicious. This should reach all Hindus