மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகர். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவர். திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்த பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் காசி போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். பெற்றோரை அனைவர் எதிரிலும் சில நேரங்களில் அவமரியாதை செய்தான் புண்டரீகர். காசி செல்லும் வழியில் யாத்ரீகர்கள் அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தின் அருகே இரவு ஓய்வெடுத்தார்கள். அதிகாலை நேரத்தில் விழித்த புண்டரீகர் நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் குக்குட முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் ஆசிரமத்தை சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து தூய்மையின் அம்சங்களாக அழகாக மாறி இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகருக்கு புரியவில்லை. மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவர் வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது அவர்களின் பாதங்களில் விழுந்து நீங்கள் யார் அழுக்காக வரும் நீங்கள் அழகாக மாறுவது எப்படி என்று கேட்டார்.
கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். எங்களிடம் வருபவர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்து விட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களுடன் நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் இந்த குக்குட முனிவருக்கு சேவை செய்வதால் எங்கள் பாவங்கள் கழுவப்பட்டு மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் மறைந்தார்கள். அக்கணமே புண்டரீகர் மனம் திருந்தினார். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டார். புண்டரீகர் தன் தாய் தந்தையின் மீது வைத்துள்ள பக்தியை அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்க்க வந்தார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகர் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். வாசலில் வந்து நின்ற கிருஷ்ணர் நான் கிருஷ்ணர் ருக்மணியுடன் வந்திருக்கிறேன் என்றார். இதனை கேட்ட புண்டரீகர் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள் நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும் ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றார்கள். தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகர் அவர்களை காண சென்றார். வந்திருப்பது கிருஷ்ணர் ருக்மிணி தேவி என்பதை அறிந்த புண்டரீகன் காத்திருக்க வைத்ததற்காக அவர்களின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். உன் தாய் தந்தைக்கு நீ செய்யும் சேவையில் மனம் மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பாண்டுரங்கனே நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். உன் பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் புண்டரீகர். அதற்கு கிருஷ்ணர் இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள் தங்களது துன்பம் எல்லாம் நீங்கி சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று அருளினார்.
புண்டரீபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில் அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி பண்டரீபுரம் ஆகிவிட்டது. பண்டரீபுரத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால் அந்த நதி இங்கு சந்திரபாகா நதி என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால் பிறைச் சந்திரன் என்று பொருள். இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் கிருஷ்ணர் பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன் தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறார்.