சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும். சுகாசனர் வடிவத்தில் இடக் காலை மடக்கி வைத்து வலக் காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார். நல்லிருக்கை நாதர் என்ற தூய தமிழ் பெயரும் உள்ளது.
வெள்ளி மலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் ஜோதி மயமான சிவபெருமான் நடு நாயகனாக வீற்றிருக்க அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும் தேவர்களும் முனிவர்களும் அமரர்களும் அவரை வழிபட்டபடி இருப்பார்கள். சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருப்பார். உமாதேவியார் இறைவனின் தாள் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் சுகாசன நிலையில் அமர்ந்த படி விடையளித்தார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி விளக்கிய காரணத்தால் இவர் சுகாசன மூர்த்தி என்ற பெயரை பெற்றார். சுகா என்பது மனம் மற்றும் உடலின் மகிழ்ச்சியான நிலையைக் குறிக்கிறது. ஆசனம் என்பது யோகத்தில் அமரும் ஒரு உடல் நிலையைக் குறிக்கிறது. மகிழ்ச்சியாக யோகத்தில் அமர்ந்த நிலையில் உமாதேவியாருக்கு இறைவன் உபதேசித்துள்ளார். இவரது கரங்கல் மான் மழு உள்ளது.
சுகாசன மூர்த்தி சீர்காழி திருத்தலத்தில் உள்ளார். தஞ்சை கலைக்கூடத்தில் சுகாசன மூர்த்தி உள்ளார்.