ஆரம்பம் என்பதும் முடிவு என்பதும் இல்லாத சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனாகவும் அழிக்கின்ற தொழிலை செய்யும் உருத்திரனாகவும் மறைத்தல் தொழிலை செய்யும் மகேஸ்வரராகவும் காக்கும் தொழிலை செய்கின்ற திருமாலாகவும் அருளும் தொழிலை செய்கின்ற சதாசிவமூர்த்தியாகவும் இருக்கிறார். ஈரேழு பதினான்கு உலகத்தையும் பல அண்டங்களையும் அவரே படைத்தார். அவரே அனைத்து மாகா சமுத்திரங்களையும் உருவாக்கினார். அண்டங்களையும் உலகங்களையும் அனைத்து உயிரினங்களையும் அவரது சக்தியே இயங்குகின்றது. பிரளய காலத்தில் அனைத்தையும் அழிப்பவர் அவரே. இந்த அண்டங்கள் உலகங்கள் அனைத்தும் அழியும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அந்த வெள்ளத்தில் உலகத்தில் உள்ள தேவர்கள் முதற்கொண்டு நவகிரகங்கள் சூரியன் சந்திரன் எட்டு திசை காவலர்கள் உலகத்தில் உள்ள பறப்பன ஊர்வன தாவரங்கள் மனிதர்கள் என அனைவரும் மூழ்கினார்கள். இறைவன் ஓம் என்னும் பிரணவத்தில் அனைவரையும் ஒடுக்கி காப்பாற்றி அருளினார். நீண்ட நாட்கள் ஓம் என்னும் பிரணவத்திலேயே அனைவரும் ஒடுங்கிய நிலையிலேயே இருந்தார்கள்.
மான் மழு ஏந்தி பாம்பு புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும் பார்வதியுடன் தம்பதி சமேதராக தன்னுடைய ஓம் என்னும் பிரணவத்தில் ஒன்றிய அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் ஈரேழு உலகத்தையும் மீண்டும் சிருஷ்டி செய்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயிலில் சேத்திரபாலர் அருள்பாலிக்கிறார்.