நானே பெரியவன் என்ற அகங்காரத்தின் மிகுதியால் இறைவனையே எதிர்ப்பவர்களையும் சிவபெருமானை சரணடைந்தவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துபவர்களை அழிக்கவும் சிவபெருமான் எடுக்கும் வடிவமே வீரபத்திரர் வடிவம் ஆகும்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுதுமே இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும். ஒரு போரில் தேவர்கள் அசுரர்களை போரில் தோற்கடித்து அவர்களை வெற்றி கொண்டார்கள். அசுரர்கள் தேவர்களை வெற்றி கொள்ள முடியாமல் தவித்தனர். அசுரர்கள் தங்கள் குருவான சுக்கிரச்சாரியாரை ஆலோசித்தார்கள். அவரும் அசுரர்களுக்கு ஆலோசனைக் கூறி ஆறுதல் சொல்லி அசுரர்களில் ஒருவனான வீரமார்த்தண்டன் என்பவனை அழைத்து பிரம்மாவை நோக்கி தவமியற்றச் சொன்னார். அதன்படியே வீரமார்த்தண்டன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் பிரம்மா காட்சிக் கொடுத்தார். தவத்தினால் எலும்பும் தோலுமான வீரமார்த்தண்டனை பழையபடி ஆக்கி என்ன வேண்டுமெனக் கேட்டார். வீரமார்த்தண்டன் மூன்று உலகங்களையும் எனை வெல்ல யாருமில்லாதபடி நான் அரசாள வேண்டுமென்ற வரத்தை வாங்கினான். தேவர்களை வெற்றி கொண்டு அவர்களை துன்புறுத்தினான். தேவர்களுக்கு செய்த கொடுமை உச்ச கட்டம் அடையவே பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர்.
சிவபெருமான் அவர்களுக்கு ஆறுதல் கூறி வீரபத்திரர் வடிவமெடுத்து வீரமார்த்தண்டனை எதிர்க்க முடிவு செய்தார். முதலில் வீரமார்த்தண்டனின் படைகளைக் கொன்றார். பின்னர் வீரமார்த்தண்டர் உடன் போரிட்டார். வீரமார்த்தண்டனும் பல விதமான மாயைகளைச் செய்து தப்பிக்கப் பார்த்தான். ஆனால் கடைசியில் ஒன்றும் ஆகவில்லை. வீரபத்திரர் வீரமார்த்தண்டனைக் கொன்றார். தேவர்களின் துயரினைத் துடைத்து தேவர்களை அவரவர்களுக்கு உண்டான பதவியில் அமர்த்தி உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வளித்தார். வீரமார்த்தண்டனைக் கொன்று தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் கொண்ட கோலமே வீரபத்திர மூர்த்தியாகும்.
தமிழ் நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணை தெய்வமாக வைக்கப்பட்டு கோயில்களில் வழிபடப் படுகிறார். தமிழ் நாட்டில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் மற்றும் அனுமந்தபுரம் திருவண்ணாமலை திருக்கழுக்குன்றம் கும்பகோணம் தாராசுரம் அரியலூர் திருக்கடவூர் போன்ற இடங்களிலும் காரைக்கால் அருகே பெருந்துறையிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பேதாதம்பட்டி அருகே ஆத்தனூர் இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கல்வியங்காடு வியாபாரிமூலை ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.