சோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றார். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு நானே பெரியவன் என்ற எண்ணத்தில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்ற மீன் சோமுகாசுரனைத் தேடிக் கடலை கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டு பிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்த வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மலையைப் போன்ற அந்த மீன் கடலில் கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். அதன் வீரியம் முழுவதையும் அடக்குவதற்காக அதன் விழிகள் இரண்டையும் பறித்து அவற்றைத் தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சுய உருவத்தைப் பெற்று சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க அவரும் தந்து ஆசி கூறினார். மீன் வடிவம் கொண்ட திருமால்லின் செருக்கை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும். அதர்வண வேதம் மீனுருவில் அட்டகாசம் செய்த திருமாலை அடக்கச் சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்துச் சென்றதாக கூறுகிறது. இவரை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.