சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்து நானே பெரியவன் என்ற அகந்தையுடன் இருந்தார் பிரம்மா. பிரம்மாவைப் போல் யாரும் அகந்தை கொள்ளக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான் பைரவரின் ரூபத்தை எடுத்து பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை திருகி எடுத்தார். பிரம்மாவின் தலையிலுள்ள மண்டை ஓடு அவரது கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. சிவகணத் தலைவர்களுடன் வனம் சென்ற பைரவர் அங்கிருந்த முனிவர்கள் ரிஷிகள் தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அவர்களின் உடம்பிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். அடுத்து வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் சிவகணங்களுடன் சென்று திருமாலிடம் இரத்தத்தை கேட்டார். திருமால் தனது நகத்தினால் நெற்றியினை கீறி ஒரு ரத்த நரம்பிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார். இவ்வாறு முனிவர் ரிஷிகள் தவசிகள் தேவர்கள் திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்று கபாலத்தில் இருந்த அகந்தையையும் கர்வத்தையும் அழித்தார் பைரவர் ரூபத்தில் இருந்த சிவபெருமான். கபாலத்தில் இருந்த அகந்தை அழிந்தவுடன் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு நீங்கியது. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க இரத்தத்தை பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இந்த மூர்த்தி காசியில் இருக்கிறார்.