பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்து பாம்பை அடக்கி தனக்கு ஆபரணங்களாக ஏற்றுக் கொண்ட சிவ வடிவம் புஜங்கத் ராசமூர்த்தி எனப்படுகிறது.
தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.
தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் பஞ்ச நாகங்களை உருவாக்கி அவரை நோக்கி ஏவினார்கள்.
இறைவன் அருகில் அந்த பாம்பு தன்னுடைய பற்களில் கடும் விஷத்துடன் சீறி வந்தது. இறைவன் பாம்பிற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு பஞ்ச நாகங்களில் ஒன்றை தன் இடுப்பில் ஆரமாகவும் இரண்டை தோள்களிலும் இரண்டை கால்களில் சிலம்பாகவும் அணிந்து கொண்டார். புஜங்கம் என்றால் பாம்பு. திராசம் என்றால் பயப்படுதல். பாம்பை தனது உடலில் ஏற்றுக் கொண்ட போது புஜங்கத் ராசமூர்த்தி என்று பெயர் பெற்றார்.
பெரும்புலியூர் கோயிலில் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார்.