சிவபெருமானின் திருவடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் கல்லால மரம் என்று அழைக்கப்படும் ஆலமர நிழலில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்து சனகாதி முனிவர்களுக்கு கற்பிப்பதுடன் உலக மக்களுக்கும் கற்பிக்கிறார். மேலும் கின்னரர்களுக்கும் சிங்கம் புலி நச்சு பாம்புகள் முதலியவற்றிற்கும் கல்லால மர நிழலில் இருந்து கற்பிப்பதாக சுந்தரமூர்த்தி நாயனார் தனது தேவாரத்தில் பாடியிருக்கிறார். இவர் மௌனமாக வீற்றிருந்து பரமானந்தத்தை தனது உணர்வினால் தனது சீடர்களுக்கு அருளினார். தட்சணம் என்றால் தெற்கு திசை, ஞானம், சாமர்த்தியம் என பொருள் தருகிறது. த-அறிவு க்ஷ-தெளிவு ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரத்தின் பொருளாகும். தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தெற்குத் திசை தீயவை அழிவதை குறிக்கிறது. மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்று பொருளாகும். அதாவது ஞானகடவுளாக அருளும் பரமகுரு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. வடக்கு திசை பெருவாழ்வை தருவதை குறிக்கிறது. இன்பமான வாழ்வை வேண்டி உயிர்கள் வடக்கு நோக்கி வழிபடுவதற்காகத்தான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் என்று ஞானிகள் அருளியிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி குருவுக்கும் மேலான குருவானவர்.
பிரம்மாவின் நான்கு புதல்வர்களான சனகன் சனந்தனன் சனாதனன் சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்களும் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். வேதங்களில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். இதற்கு சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்று கட்டளையிட்டார். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதத்தைப் பற்றி விளக்கி விரிவாகக் கூறினார். ஆனாலும் அவர்களுக்குள் மேலும் சந்தேகங்கள் வந்தது. கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனைக் கண்ட சிவபெருமான் தான் அமர்ந்த கோலத்தில் தன் கைகளை சின் முத்திரையை நால்வருக்கும் காட்டி அமர்ந்தார். இறைவனின் சின் முத்திரையை பார்த்ததும் நால்வருக்கும் இருந்த கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்தது. மனம் அமைதியடைந்து பேரின்பத்தில் ஆழ்ந்தார்கள். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் சிவபெருமான் சின் முத்திரை காட்டி உபதேசித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்கள் கேள்விகள் அனைத்தையும் தீர்த்த வடிவமே தட்சணாமூர்த்தி வடிவமாகும்.
இமயத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்த கோலத்தில் புலித்தொழில் அமர்ந்த நிலையில் இருக்கும் இத்திருவருவத்தின் வலது கால் கீழே தொங்கிய நிலையிலும் இடது கால் மடிந்த நிலையில் இருக்கும். நான்கு கைகளில் முன்னுள்ள ஒரு கையில் ருத்ராட்ச மாலையும் மற்றோரு கையில் தீ அல்லது பாம்பும் இருக்கும். சில வடிவங்களில் புத்தகம் அல்லது தீ அல்லது பாம்பு இருக்கும். சடாமுடியில் எருக்கம்பூ பாம்பு சிறுமணி கபாலம் பிறை சந்திரன் கங்கை ஆகியன இருக்கும். இட காதில் சங்கபத்திரமும் வலது காதில் குண்டலமும் இருக்கும். கழுத்தில் ருத்ராட்ச மாலை இருக்கும். மிகவும் பழங்காலத்தில் தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழிருந்து தெற்கே பார்த்துக் கொண்டிருப்பதாக அகநானூறு கலித்தொகை சிலப்பதிகாரப் பாடல்கள் சொல்கிறது. திருமுறைகளில் பல இடங்களில் தட்சிணாமூர்த்தியின் பெருமையை கூறப்பட்டுள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் பற்றி பல பாடல்களில் சிறப்பாக கூறியுள்ளார். திருமழிசை ஆழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் 4000 திவ்ய பிரபந்தத்தில் தட்சிணாமூர்த்தியின் பெருமைகளை கூறியுள்ளனர்.
ஞான தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தி வீணா தட்சிணாமூர்த்தி வியாக்கியான தட்சிணாமூர்த்தி வீர தட்சிணாமூர்த்தி லட்சுமி தட்சிணாமூர்த்தி ராஜ தட்சிணாமூர்த்தி பிரம்ம தட்சிணாமூர்த்தி சக்தி தட்சிணாமூர்த்தி அத்த தட்சிணாமூர்த்தி என ஆகமங்களிலும் சிற்ப நூல்களிலும் பல பெயர்கள் உள்ளது. இவற்றில் வியாக்கண தட்சிணாமூர்த்தி ஞான தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தி வீணா தட்சிணாமூர்த்தி ஆகிய வடிவங்களே கோவில்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவங்கள் தமிழ்நாட்டில் அனைத்து சிவன் கோயில்களிலும் உள்ளது. கருவறையின் வெளிப்பக்கம் உள்ள தெற்கு பக்கத்தில் அமர்ந்திருந்து அடியவர்களை தனது அருட்பார்வையால் அழைத்து சிவஞானத்தை தனது மௌன மொழியால் அருளுகிறார். அமெரிக்காவில் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உண்டு. பென்சில் வேனியாவில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி உருவச்சிலை 1500 கிலோ எடையுடையது. இத்திருவரும் தொடர்பான பல கல்வெட்டுகள் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் பிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தியை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக சந்நிதி அமைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.