சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி இடக்காலை ஊன்றி வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். அறவெள்விடைக்கு அருளிய வடிவம் என்ற வேறு பெயரும் உள்ளது.
கிருத யுகம் துவாபர யுகம் த்ரேதாயுகம் கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 43 லட்சத்து 21000 மனித வருடங்கள். அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது முடிந்தால் அது பிரம்மாவின் ஆயுட்காலமாகும். பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது கணக்கு. அழியும் ஊழிக் காலத்தில் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்ம தேவதை வேதனை கொண்டது. ஊழிக் காலத்தில் தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது என்று சிந்தித்தது.
சிவபெருமானிடம் சரணடைவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்ம தேவதை சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது. தருமத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும் திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும் துவாபர யுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவாவடுதுறை மாசிலாமணிஸ்வரர் கோயிலில் இடபாந்திக மூர்த்தி உள்ளார்.